Tuesday, November 30, 2010

அன்பான அப்பா?...

கடந்த பத்துப் பதினைந்து நாட்களாக பதிவுலகில் சலசலப்பை ஏற்படுத்திய தலைப்பு ‘லிவிங் டுகெதர்’. நேர்மையான, வக்கிரமான, நகைச்சுவையான, புரிதலுடனான, அபத்தமான என்று பல பதிவுகள் வந்துவிட்டன. ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா. திரும்பவும் முதலிலிருந்தா என்று அலுத்துக் கொள்ள வேண்டாம். இந்த விவாதங்களில் முக்கியமாக முன்வைக்கப்பட்ட விஷயம் பிள்ளைகளின் எதிர்காலம் என்பது.

எதிர்ப்பவர்கள் அணியில் பிள்ளைகள் வன்முறையாளனாக, சமூக விரோதிகளாக வளரக்கூடும் என்ற அச்சம், பிள்ளைகளுக்காக வாழ்வது என்ற தியாகம் இருக்காது, பேஏஏஏர் சொல்லும் பிள்ளையாக இருக்காது என்ற அதி நவீன கண்டுபிடிப்பு (ங்கொய்யால தாத்தனுக்கு அப்பன் பேரு கேட்டா சொல்லத் தெரியாது இதுல குடும்பப் பேரை காப்பாத்தி சொல்ல வேற போகுது),விட்டுக் கொடுத்து வாழ்தல் என்ற மஹா உன்னதமான தியாகம் எல்லாம் பேசப்பட்டது.

அது அவரவர் விருப்பம், அடிப்படை உரிமை என்று பேசியவர்கள் குழந்தை வளர்ப்பு முறை, மேலை நாடுகளில் குழந்தைகளுக்கான உரிமைகள், சுதந்திரங்கள் போன்றவற்றை முன்வைத்தார்கள்.

எதிர்ப்பு, ஆதரிப்பு, இரண்டுமற்ற தனிப்பட்ட மனித உரிமை என்பது தாண்டி கருத்துக்களை மட்டும் பார்க்கும் போது முக்கியமாக தென்படும் விஷயம் பெற்றோர்களின் கடமை (பிள்ளைக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை அமைத்துக் கொடுப்பது) பிள்ளைகளின் கடமை என்பது.

டமில் தந்தையோ, இந்தியத் தந்தையோ, கோணியைச் சுத்தி அடித்தாற்போல் பொத்தாம் பொதுவாக அயல்நாட்டுத் தந்தையோ எல்லாவற்றிலும் பொறுப்பற்ற தந்தைகள் (அது எந்த வகையிலானாலும்) இருக்கத்தான் செய்கிறார்கள். பொறுப்பான தந்தைகளைப் பற்றி மட்டும் பார்ப்போம்.

இன்று கலாச்சாரம், நம் பண்பாடு என்று சொல்லிக் கொண்டு நாம் பிள்ளை வளர்க்கும் முறை இருக்கும் லட்சணத்தைப் பார்த்தேயாக வேண்டும். வீட்டுக்கு வீடு வாசப்படி என்ற டகால்டி எஸ்கேபிஸம், வளர்ப்பு சரியில்லை என்ற ஒற்றை வரி விமரிசனத்தில் புறம்தள்ளும் மனோபாவம் எல்லாம் ஓரம் வைத்துவிட்டுப் பார்க்கவேண்டிய விஷயம் இது.

இந்தியத் தந்தையிடம் (முக்கியமாக டமில் தந்தையிடம்) பெற்றோரின் கடமை என்ன என்று கேட்டுப் பாருங்கள். பையனை நல்லபடியா வளர்க்கணும். நல்லா படிக்க வைக்கணும். அவன் கால்ல அவன் நிக்கிறாமாதிரி செஞ்சுட்டா நம்ம வயசான காலத்துல குடும்ப பாரத்தை அவன் சுமப்பான்.

பெண்ணானால், அடக்க ஒடுக்கமாக வளர்க்கணும், படிக்க வைக்கணும், காலா காலத்துல ஒரு நல்ல இடத்துல புடிச்சி கொடுத்துட்டா ஒரு பாரம் குறையும். நாள பின்ன கண்ணக் கசக்காம நல்லா இருந்தா அதைவிட வேறென்ன வேண்டும். ஆக பிள்ளைகள் சுமையும் சுமைதாங்கியும்தானா?

முடிந்தது கடமை!!! இப்படியே நடந்துவிட்டால் குறை சொல்ல ஏதுமில்லைதான். ஆனால், வலிக்குமே என்று பயப்படாமல் சர்ஜரி மாதிரி கீறிப்பார்த்தால் தெரிவது அப்பட்டமான சுயநலம். இல்லை என மறுக்க முடியாது. சற்றே எதிர்பார்ப்பில் சறுக்கல் ஏற்படின் இந்தச் சுயநலம் வெளிப்படாமல் போகாது. அதற்கான அத்தாட்சி இன்று முளைத்திருக்கும் முதியோர் இல்லங்கள்.

நல்ல ஸ்கூலில் சேர்த்தேன். வருமானத்துக்கு மீறியதென்றாலும் ஓவர்டைம், சைட் பிசினஸ் என்று எப்படி எல்லாம் கஷ்டப்பட்டு படிக்கவைத்தேன். அவனை இவனைப் பார்த்து காலில் கையில் விழுந்து வேலை வாங்கிக் கொடுத்தேன், அல்லது காசைக் கொட்டி தனியார் கல்லூரியில் காம்பஸ் இண்டர்வியூ இருக்குமென்றே அங்கு சேர்த்தேன். வேலை கிடைத்ததும் சாப்பாட்டுக்கு கொஞ்சம்னு குடுக்குறான். தங்கச்சி, அக்கா கலியாணத்துக்கு ஒரு பைசா கொடுக்கலை என்று குறைபாடுகள் தலை தூக்கும்போது வார்த்தைகள் தடிக்கும்.

உன்னை எப்படியெல்லாம் வளர்த்தேன் என்று சுயபுலம்பல் ஆரம்பிக்கும்போது, நீ வளர்த்தால் ஆச்சா. நான் பொறுப்பாக நடந்து கொண்டிராவிட்டால் இப்படி அலட்ட முடியுமா என்ற பதிலடி விழும். ஒரு கட்டத்தில் கொச்சையாக உன் இச்சைக்குப் பெற்றுப் போட்டுவிட்டு,  வளர்த்தேன் வளர்த்தேன் என்று அலட்டுகிறாயே. நாய் பூனை எல்லாம் கூட பெத்தா வளர்க்காமலா இருக்கு போய்யா ஜோலியப் பார்த்துகிட்டு வரைக்கும் போய், அப்பன்காரன் மடமடவென்று குளியல் அறையிலோ, சமையல் அறையிலோ ஒரு குடம் தண்ணீரை தலையில் கொட்டிக் கொண்டு நீ எனக்குப் பிள்ளையில்லை, நான் உனக்கு அப்பனில்லை என்பதில் கொண்டு விடுகிறது.

தன் விருப்பத்துக்கு படிக்கவைத்து, தன் விருப்பத்தை எதிர்காலமாகத் திணித்து, தன் விருப்பத்துக்கு திருமணம் செய்து, அதற்குப் பின்னும் ‘எம்மவன் என்னைக் கேக்காம ஒரு துரும்பு கூட எடுத்துப் போடமாட்டான்’ என்று பெருமை கொள்வது பெருமைப் படக்கூடிய விஷயமாகத் தெரியவில்லை.

'சுயத்தை மதிக்கத் தெரிந்தவனுக்குத்தான் அடுத்தவனை மதிக்கத் தெரியும்’ என்ற வழக்கு எத்தனை ஆழமானது. பரம்பரை பரம்பரையாக சுயத்தை இழக்கப் பழக்கி அதையே பெருமை பேசுவதன் பலன் இன்று பரவலாக அறுவடையாகிறது. இல்லையேல் பெற்று வளர்த்தேன், இன்று வயதான காலத்தில் உதறிவிட்டான் என்று சுயமிழந்து புலம்பும் நிலை ஏன் வருகிறது?

இந்த அழகில் பிள்ளைகளின் வளர்ச்சிக்கேற்ற, அவர்களின் உள்வாங்கும் திறனுக்கேற்ற அவர்களின் விருப்பமான கல்வி, சுயநம்பிக்கை, அப்பன் காசு கடன் என்ற எண்ணம், சமூகத்துக்காக ஏதேனும் செய்கிறேன் என்ற ஆர்வம், கட்டுப் புத்தகம் தவிர கற்றுக் கொள்ள இப்பிரபஞ்சம் என்ற தெளிவு  என்று கற்றுக் கொடுத்து,  ஆரம்பம் முதலே கண்டிப்பான நண்பனாக நெறிப்படுத்தும் பாங்கு, உற்ற வயதில் உன் வாழ்க்கையின் ஆரம்பம் இது! உன் வழியைச் செம்மையாய்த் தேர்ந்தெடு. நான் இருக்கிறேன் எட்ட நின்று கைதட்ட!! தேவைப் படும்போது உதவவும் செய்கிறேன். எனக்கு உன் நலம், உன் மகிழ்ச்சி, உன் சிறப்பான வாழ்க்கை போதும் என்று ஒரு நண்பனாக கையசைத்து தேவைப்படுகையில் ஆலோசனை சொல்லி, இது என் கருத்து மட்டுமே! முடிவு உன்னுடையது என்று வழிகாட்டும் வெளிநாட்டுப் பெற்றோரை (வெளிநாட்டிலிருக்கும் இந்தியப் பெற்றோரையும் சேர்த்து) எள்ளிப் பேச எப்படி முடிகிறது? 
(தொடரும்?)

Monday, November 29, 2010

விடியா மூஞ்சி வேலைக்குப் போனா...

இன்று ஒரு பழைய சக ஊழியர், சீனியர் வந்திருந்தார். வழக்கமான விசாரிப்புகளின் பின் அவரவர் குடும்பம் பற்றிய விசாரிப்பு தொடர்ந்தது. மிக நல்ல மனிதர். கடும் உழைப்பாளி. மகனுக்கு சரியான வேலையில்லை. பிஸினஸ் செய்கிறேன் என்று செட்டில்மெண்ட் பணத்தையும் சேர்த்துக் கரைத்ததுதான் மிச்சம்.

நேர்மையான நடுத்தரக் குடும்பக்காரன், அதுவும் ஒரு பெண்ணைப் பெற்றவன் அது பிறந்த நாளிலிருந்தே நகை, நட்டு, பாத்திரம் பண்டம் என்று எல்லாம் சேர்த்து வைத்து, கலியாணத்துக்கும் கொஞ்சம் காசு சேர்த்தாலும் கடன் இல்லாமல் முடியாது என்பது விதி அல்லவா. மகளுக்கு ஏதோ கம்பெனியில் நல்ல உத்தியோகம் என்று முடிவு செய்து நிச்சயதார்த்தமும் முடிந்த மாப்பிள்ளை, வெளிநாட்டில் வேலை வாய்ப்பு கிடைத்திருப்பதாகவும், போனால் திரும்புகையில் சூட்கேஸில்தான் பணம் கொண்டு வரமுடியும் எனவும் போட்ட போட்டில் மனிதர் என்ன செய்வார்.

ரொக்கம் கொஞ்சம் குறைவதாக மறைமுக பேரத்தில் பட்ஜெட் எங்கேயோ பிய்த்துக் கொண்டு போனதாம். 2 வருடத்தில் பெரிதாக ஒன்றும் சம்பாதிக்காமல் இனி வெளிநாடு சரிப்படாது என்று வேலையை விட்டுவிட்டு, இங்கே இருந்த வேலையும் போய், இவரும் பிஸினஸ் என்று மாமனாரைச் சார்ந்தால் என்ன செய்வார்? இனி பிஸினஸுக்கு இருக்கும் வீட்டை விற்க முடியாது என்ற விழிப்பில் கை விரிக்க, எதோ வேலை என்று தாவித் தாவி போவதும் வருவதுமாக இரண்டு குடும்பங்களும் அவரைச் சார்ந்தேயிருப்பதாக வருத்தப்பட்டார்.

கஷ்டப்படுபவருக்கு இப்படி மேல்மேலும் கஷ்டம்தான் என்றாலும், அதெப்படியோ ஒரு சிலருக்கு மட்டும் இப்படி சேர்த்து வைத்ததெல்லாம் செல்லாத காசு என்பது போல அமைந்துவிடுகிறது. அப்படி அமைந்த இரண்டு கேஸ்களை நினைவு கூர்ந்தேன். கொஞ்சமும் அசூயையின்றி ரசித்துச் சிரித்தவரைப் பார்க்க பாவமாய் இருந்தது.

முதலாமவருக்கு மைலாப்பூரில் சொந்தவீடு. அஃபீசில்  பேண்ட் ஷர்ட் பிட் தவணை வியாபாரமும் செய்துவந்தார். மூக்கு அபாரம். மதியம் லஞ்ச் நேரத்தில் உட்கார்ந்த இடத்திலிருந்தே ‘என்னம்மா லக்ஷ்மி! எலுமிச்சம் சாதமா? உருளைக்கிழங்கும் சேர்த்து வாசனை தூக்குதே’ என்பார். ஆமாம் என்று சொல்லிவிட்டு சாப்பிடவா முடியும்? டிஃபன் பாக்ஸ் மூடியில் கொஞ்சம் ஷேர் வரும். கூட சாப்பிடுபவர்களும் தங்கள் பங்குக்கு படையல் வைப்பார்கள். இப்படியே பெரும்பாலான நாட்கள் ஓடிவிடும்.

மகளுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்ததும் புலம்பலும் ஆரம்பித்தது. வசதிக்குத்தக்க மாப்பிள்ளையும் வேணும், காசும் கரிசனமாயிருக்கணுமென்றால் முடியுமா? வரதட்சிணை, வைரத்தோடு கேட்ட சம்பந்தியம்மா இவர் திட்டியது கேட்டிருந்தால் தற்கொலை பண்ணிக் கொண்டிருப்பார். மாப்பிள்ளை எனக்கு கலியாணமே வேண்டாம் என்று சன்னியாசியாய் போயிருப்பான்?

வந்தார் ஒரு அமெரிக்க மாப்பிள்ளை. முன்னதாக ஃபோன் செய்து தான், தன் பெற்றோர், தன் தமக்கை மற்றும் அவள் கணவர் ஐந்து பேர்தான். இன்ஃபார்மல் மீட் என்று சொன்னதும், மனுசனுக்கு சினிமா கவனம் வந்துவிட்டது போல. மாப்பிள்ளை வந்தார். பெண்ணைப் பார்த்தார். பிடித்திருக்கிறது என்று பட்டென்று சொல்லிவிட்டு தான் 3 மாத விடுமுறையில் வந்திருப்பதாகவும், திருமணம் விரைவில் முடிய வேண்டும் வசதிப்படுமா என்றதும், மனதில் உட்கார்ந்திருந்த வண்டு குடைய ஆரம்பித்தது.

அம்மா, அப்பா, அக்கா என்று இழுத்ததும் என் விருப்பம் அவர்களுக்கு சம்மதம் என்று கத்தரி நறுக்கிற்று. வாய்தா வாங்க முடியாமல், சரி ஒரு நல்ல நாள் பார்த்து லௌகீகம் பேச வருகிறோம் என்றதும், மாப்பிள்ளை அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. சீர் மண்ணாங்கட்டி எதுவும் தேவையில்லை. உங்கள் மகளுக்கு என்ன நகை போடுவீர்களோ உங்கள் இஷ்டம். பாத்திரம் பண்டம் வாங்கி வைத்திருந்தால் யாராவது ஏழைப் பெண்ணுக்கு திருமணத்துக்கு கொடுத்துவிடுங்கள். எங்கள் உறவினர்கள் என்று ஐம்பது பேர் வரக்கூடும். நல்ல சத்திரமாக இருக்க வேண்டும் என்றதும், இது ஃப்ராடு கேசு என்ற பயமே வந்துவிட்டது.

மனதைப் படித்தவன் போல் மாப்பிள்ளை, என்ன சந்தேகமா இருக்கா? எனக்கு முதல் கலியாணம்தான். ப்ரைவேட் இன்வெஸ்டிகேஷன் பண்ணனும்னா பண்ணிக்கலாம். ஐ வில் பே ஃபார் இட். மெடிக்கல் செக்கப்புக்கும் ரெடி என்று ஆப்பு வைத்தான். ஒரு பக்கம் பயமிருந்தாலும் விடவா முடியும்? துணிந்து ஒப்புக் கொண்டு கலியாணமும் முடித்து அனுப்பி ஆறு மாதத்தில் பாஸ்போர்ட் வாங்கணும்யா! மாப்பிள்ளை வந்தே ஆகணுமுன்னு ஒத்தக்கால்ல நிக்கிறான் என்று வாயெல்லாம் பல்லாக நின்றார்.

அடுத்த பார்ட்டி ரெம்ம்ம்ம்ம்ம்ப நல்ல மனுஷன். நல்லவர்தான். ஆனால் நல்லது என்பதை வாயால் சொன்னாலும் சந்தோஷப்பட்டு விடுவார்களே என்பதால் சொல்லமாட்டார். ப்ரொமோஷன் வந்தால் ஒரு ஐம்பது ரூபாய் கூட சம்பளம் வருமென்று காத்திருப்பவர் போய் கேட்பார். ‘அதெல்லாம் இப்ப வராதுய்யா! இன்னும் டைம் ஆகும்!’ என்று சொல்லுவார். கேட்டவர் நொந்து போய் சீட்டுக்குத் திரும்பினால் ப்ரோமோஷன் ஆர்டர் காத்திருக்கும்.

கேட்டபோதே இப்போதான் போட்டு அனுப்பியிருக்கிறேன் என்று சொல்லிச் சந்தோஷப்பட்டுவிட்டால் என்ன செய்வது? அவ்வளவு நல்ல மனிதர். இவருக்கும் ஒரு மகள். ச்ச்சும்மா வாக் இன் இண்டர்வ்யூவில் சிடி பேங்கில் உடனடியாக வேலை கிடைத்தது. அப்பாடா, இன்னும் வசதியாகப் பார்க்கலாம் என்று இருந்தபோது மேனேஜராக ப்ரொமோஷனும் கிடைத்தது. ஏதோ மீட்டிங்கில் பார்த்த இன்னோரு மேனேஜருக்குப் பிடித்துவிட பெண் கேட்டு வந்தார்கள். ஜாதகம் இத்தியாதி பொருந்திப் போக, ஆசைப் பட்ட பெண்ணாயிற்றே! அது இது என்று கேட்காமல் போட்டது போதும் என்று அதிக செலவில்லாமல் திருமணமாகிவிட்டது.

இருங்க இருங்க! இனிமேல்தான் க்ளைமாக்ஸே. ரிட்டையர் ஆகி 15 வருடம் கழித்து, தி. நகரில் ரெண்டரை க்ரவுண்டு நிலத்தில் பெரிய வீட்டை  மண்டையைப் போடுமுன் மகளுக்கு எழுதி வைக்கும் மாமியார் வாய்க்கும் அதிர்ஷ்டம் எத்தனை பேருக்கு  இருக்கும்? நம்மவருக்கு அதுவும் வாய்த்தது.

இதைச் சொன்னவர், அதே தி. நகரில் தன் சொந்த வீட்டை ஃப்ளாட் ப்ரமோட்டருக்கு விற்று, தனக்கும் தன் ஒரே மகனுக்கும் ஆளுக்கு ஒரு ஃப்ளாட்டும் கணிசமான தொகையும் பெற்றவர். சர்வீஸ்ல ஒருத்தனுக்கு நல்லது பண்ணவனில்லை அவன். அவனுக்கு அடிச்ச அதிர்ஷடத்தப் பார்த்தியா? ரிட்டையராகி 15 வருஷம் கழிச்சு  அடிச்சான் பாரு ப்ரைஸ். கிட்டத்தட்ட 2 கோடி பெறும் அந்த வீடு! ஹூம்! நாமளும்தான் பொறந்திருக்கோம் என்று அவர் என்னிடம் சலித்துக் கொண்டபோது நான் 900ரூ வாடகையில் வாயைத் திறந்து படுத்தால் காரை விழுந்து நிரப்பும் ஒரு வீட்டில் குடியிருந்தேன்.
~~~~~~~~

Saturday, November 27, 2010

நறுக்னு நாலு வார்த்த V5.4

தமிழர்கள் பயன் பெறும் வகையில் அதிகாரப் பகிர்வு:ராஜபக்சே உறுதி
யாரு எச்ச? கருணாவும் பிள்ளையானும் டகுள்ஸுமா?
~~~~~~~~~~~~~~~~~~
அதிகார பகிர்வு திட்டம் பரிசீலனையில் உள்ளது: இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர்
அண்ணன், தம்பி, பிள்ளைங்களுக்குள்ளயா?
~~~~~~~~~~~~~~~~~~
ராஜபட்சேவிடம் உதவி கேட்கவில்லை: நேபாளம்
அதுவே பிச்சை எடுத்த பெருமாளு. இதுல இவரு ஒதவி வேற..
~~~~~~~~~~~~~~~~~~
மறுகுடியமர்த்த வேண்டிய தமிழர்கள் 20 ஆயிரம் பேர்: எஸ்.எம்.கிருஷ்ணா
மிச்சமெல்லாம் தோட்டம் தொறவுன்னு மாளிகை கட்டி போய்ட்டாங்களா கிச்சு?
~~~~~~~~~~~~~~~~~~
யாழ்ப்பாணத்தில் தமிழர்களுக்கு 50 ஆயிரம் வீடுகள்: எஸ்.எம்.கிருஷ்ணா அடிக்கல் நாட்டுகிறார்
அடுத்த வருசம் போய் திரும்ப அங்கனயே இன்னோரு கல்லும் நடுவீரு. போங்கடாங்.
~~~~~~~~~~~~~~~~~~
இலங்கை ரயில்வே திட்டங்களுக்கு இந்தியா ரூ.1880 கோடி கடன்
குடிக்கறது கஞ்சி தண்ணி..கொப்புளிக்கறது பன்னீராம்..இங்க ரயில் உடுங்கடான்னா துட்டுல்லன்றான். எவனுக்கோ தானம்.
~~~~~~~~~~~~~~~~~~
தமிழர்கள் பகுதியில் சிங்களவர்கள் ஏன் குடியேறக்கூடாது? கேள்வி எழுப்புகிறார் ராஜபக்சே!
சிங்களவன் என்ன? சைனாக்காரன், பிலிப்பைன்ஸ், ரஷ்யா யார் வேணுமானாலும் குடியேறலாமே. உனக்கு துட்டு வந்தா சரி.
~~~~~~~~~~~~~~~~~~
இலங்கை தமிழர் புனரமைப்பு பணிகள் இந்தியாவுக்கு திருப்தி அளிக்கிறதா? கனிமொழி
யக்கா! யக்கோஓஓவ். பதினஞ்சு நாள்ள திரும்பி வருவேன். கம்பிக்குள்ள இருக்குறவங்கல்லாம் கட்டடத்துக்குள்ள இருக்கணும்னு சவுண்ட் உட்டியேக்கா? கேக்குது பாரு கேள்வி. இந்தியாக்கு திருப்தியாவாம். சொக்கு சோக்கா ஆமாம்னா நைனாவின் சாதனைன்னு பீத்திக்கலாம். த்த்த்த்த்தூஊஊஉ
~~~~~~~~~~~~~~~~~~
பாராளுமன்றம் முடக்கம்:79 கோடி இழப்பு
ஆயிரம் கோடில ஊழல் பண்றவனுங்களுக்கு இது சரக்குக்கு ஊறுகா மாதிரி.
~~~~~~~~~~~~~~~~~~
நாடாளுமன்றத்தை முடக்கும் பாஜக எம்பிக்கள் தினப்படியை பெற்றுக்கொள்வது ஏன்? காங். கேள்வி
தினம் வந்து முடக்கறாங்கள்ள. கூலி வாங்காம போக கேனையா?
~~~~~~~~~~~~~~~~~~
பிரதமர் பதவியில் விருப்பம் இல்லை: ராகுல்
மம்மி கிட்ட சொன்னா இலங்கை மாதிரி இனிமே ஜனாதிபதிதான் பிரதமரு. பிரதமர்தான் ஜனாதிபதின்னு சொல்லிட்டு போறாய்ங்க..மம்மீஈஈஈஈ
~~~~~~~~~~~~~~~~~~
தேவேகவுடா குடும்பத்தின் ஊழல்களை பத்திரிகைகளில் விளம்பரம் செய்வேன்: எடியூரப்பா
அவரு பதிலுக்கு உங்க கதைய எடுத்து உடுவாரு. இதெல்லாம் பார்த்தா ஓட்டு போடுறோம்.
~~~~~~~~~~~~~~~~~~
அரசியல் கணக்கினை முடிப்பதற்கான நேரம் நெருங்கி விட்டது:ஜெ.
கூட்டி கழிச்சி பார்த்ததில ஓட்டுக்கு எவ்ளோங்க?
~~~~~~~~~~~~~~~~~~
ஒற்றுமை இருந்தால் வீழ்த்த முடியாது: கலைஞர்
கொள்ளையடிக்கப் போனா கூட்டு ஆவாதுன்னு சொல்லுவாங்களே தல.
~~~~~~~~~~~~~~~~~~
வீட்டைக் கட்டிப்பார், கல்யாணம் பண்ணிப்பார் என்ற பழமொழி திமுக ஆட்சியில் பொருத்தமாக இருக்கிறது: ஜெ.
யம்மோவ். பையனூரும் உங்க பையன் கலியாணமும் கூடத்தான் பொருத்தமா இருந்திச்சின்னு நாளைக்கு அந்த மனுசன் சொல்லுவாரு.
~~~~~~~~~~~~~~~~~~
ஏழைகளுக்கு கல்வி செல்வம் அளிக்கும் கனவு நிறைவேறியுள்ளது: கலைஞர் பெருமிதம்
ஏழைகளுக்கு செல்வம் கனவுதாம்யா. 
~~~~~~~~~~~~~~~~~~
ஆண்கள், பெண்கள் கபடியில் இந்தியாவுக்கு தங்கம் ..
ஒருத்தர் கால ஒருத்தர் வார்ற விளையாட்டுல இது கூட வாங்கலைன்னா நாம ஆணியே புடுங்க வேணாம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Friday, November 26, 2010

கேரக்டர் சிட்நாநா...

சில நேரம் ஒரு மனிதரை ஒரு பருவத்தில் கண்டிருப்போம். ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் அவரைச் சந்திக்கும்போது அந்தப் பருவத்துக்கான புரிதலில் ஒரு புதிய பரிமாணம் தோன்றும். அதிலும் மிக அபூர்வமாக ஒரு சிலர் நம் மனதில் இருக்கும் உருவத்தை விசுவரூபமாக்கி மெய் சிலிர்க்கச் செய்வார்கள். அந்த அனுபவம் அலாதியானது. ‘சிட்நாநா’(சிட்டி நாயனா என்கிற சித்தப்பா) அத்தகையதோர் அற்புத மனிதர்.

முதன் முறை அவரைச் சந்தித்தபோது எனக்கு 11 வயது. மனிதர்களைப் பிடிக்கும் பிடிக்காது என்பதற்குப் பெரிய காரணங்கள் ஏதும் இருந்துவிட முடியாது. பழகும் விதம், குழந்தைகளோடான அந்நியோன்னியம், பரிசுகள் போன்றவையே அவற்றைத் தீர்மானிக்கும். அதையும் தாண்டிய ஏதோ ஒன்றை உணர்வது வெகு சிலருக்கு வாய்க்கும். அது என்னவென்று புரியாமல் இருக்கலாம். ஆனால் அதனாலெல்லாம் அந்தத் தாக்கம் குறைந்துவிடப் போவதில்லை. அவர்களின் ஒரு குணம், ஏதோ ஒரு சிறப்பு நம்மையறியாமல் நம்மை வழிநடத்தும் விதையாக அமர்ந்துவிடும்.

நான் 11 வயதில் பார்த்த சிட்நாநாவுக்கும் 19 வயதில் பார்த்த சிட்நாநாவுக்கும் புற மாற்றங்கள் இருந்தனவே தவிர பெரியதாக அவரிடம் ஒன்றும் மாற்றமில்லை. ஆனால் என் வயதின் முதிர்ச்சி, அனுபவம், மனிதர்களைப் படித்த சற்றே விரிந்த மன விசாலம்,அந்த மனிதரில் புதிய கோணங்களைக் காட்டத் தவறவில்லை. மீண்டும் என்னைச் செதுக்கிக் கொள்ள ஒரு பெரிய நிகழ்வு அது.

எங்கள் வீட்டு மாடியில் புதியதாய் விசாலமான ஒரு அறையும், ஒரு ஓரம் கழிப்பறை/குளியலறையும் கட்ட ஆரம்பித்தபோதுதான் என் தோழன் ‘பெத்த நானாவின்’ மகன் முரளி சொன்னான், இது ‘சிட்நாநா’வுக்கென்று. பரபரவென வேலை முடிந்து மேலே தளத்துக்குப் பதில் அஸ்பெஸ்டாஸ் போடப்பட்டதும் அந்த வயதுக்கேயான புரிதலில் சிட்நாநா மற்றவர்களை விட கொஞ்சம் வசதி குறைந்தவர், அல்லது ஏழை என்ற ஓர் எண்ணம்.

சிட்நானாவும், தீபாவளியும் ஒன்றாய் வரும் நாள் நெருங்கியது. பெத்தநாநாவின் பிள்ளைகள், ஹரி, முரளி, சுந்தருடன் இன்னொரு சிட்நாநாவின் மகன்களுக்கு சிட்நாநாவின் வருகை தீபாவளியை விட அதிக எதிர்பார்ப்பைத் தந்தது. இவர்கள் ஒவ்வொருவர் மூலமும் கிடைத்த தகவலின் படி சிட்நாநா பம்பாயிலிருந்து வருகிறார், பெரிய பணக்காரர், நல்ல செல்வாக்குள்ளவர், குடும்பம் இல்லை, அவருடை வீடுதான் நாங்கள் குடியிருக்கும் தொகுப்பு, சென்னையில் அவருக்கு 15க்கும் மேற்பட்ட டாக்ஸிகள் ஓடிக் கொண்டிருப்பது, எல்லாம் விட வரும்போதெல்லாம் சொந்தம் மட்டுமின்றி மற்ற குழந்தைகளுக்கும் பரிசோ, அவை தீர்ந்து விட்ட தருணத்தில் காசோ, எல்லாம் விட மாலைகளில் அவர்களுடன் விளையாட்டுப் பேச்சோ கதைகளோ கதைப்பது போன்ற அரிதான குணம் கொண்டவர் என்பது அவருக்காகக் காத்திருப்பவர்களை விட, இப்படி ஒரு மனிதர் எப்படியிருப்பார் என்ற எதிர்பார்ப்பை என்னிடம் உருவாக்கியது.

தீபாவளிக்கு ஒரு நாள் முன் ஒரு அதிகாலைப் பரபரப்பில் காலை மெயிலில் சிட்நாநா வந்துவிட்டதை அறிய முடிந்தது. அவருக்காக ஃப்ளாஸ்கில் காஃபி கொண்டு சென்ற சுந்தர், ‘சிட்நாநா’ வந்துட்டாங்கடா என்று ஓடியபோது நானும் ஓடினேன். பெத்த நாநாவைப் போன்று அலை அலையான முடி, கோதுமை நிறம், ஒரு வேளை பணக்காரர் என்பதால் குண்டாக இருக்கலாம், பம்பாய் என்பதால் பைஜாமா ஜிப்பா இப்படியாக இருந்தது நான் வரைந்திருந்த மன ஓவியம்.

உள்ளே அமர்ந்திருந்த மனிதரைக் கண்டதும் பெரிய அதிர்ச்சி. ஒரு பயம். திகைப்பு. ‘பரிகெத்தொத்துரா நான்னா. படுதாவு. எவரிதி?’ (ஓடி வராதே, விழுவாய், யார் இது) என்ற கேள்வியைத் தொடர்ந்த ஒரு சிரிப்பு இன்றும் என் மனதில் பசுமையாய் நினைவிருக்கிறது. என்னையறியாமல் கை கூப்பி வணங்கியது அவரை வெகுவாகக் கவர்ந்திருக்க வேண்டும். ‘நீ பேரேமிடிக்கு’ நாக்கு புரள மறுத்தது. சுந்தர்தான் பேரைச் சொன்னான்.

ஆஜானுபாகுவான உடலும் உயரமும். தும்பைப்பூ வேட்டியில் வெள்ளை முழுக்கைச் சட்டையுடன் அமர்ந்திருந்தார் மனிதர். கருத்துச் சிவந்து மினுமினுத்த பெரிய காது. தடித்த இமைகளும், உதடும். மடிப்பு மடிப்பாய் செதில் செதிலான முகம். மூக்கு உள்ளடங்கி துளை மட்டும் வித்தியாசமாக இருந்தது. உதவியாளன் ஆற்றிக் கொடுத்த காஃபியை இரண்டு கரங்களால் பற்றிய போது கரிக்கட்டைகளாய் விறைத்து நுனி சற்றே வளர்ந்த விரல்கள். அத்தனையும் அந்த வயதில் ஒரு பயம் தந்திருக்க வேண்டும். மாறாக வாத்ஸ்ல்யமான குரலும், அந்த தடித்த உதடுகளில் தவழ்ந்த புன்னகையும், நெற்றியில் ஸ்ரீசூர்ண ஒற்றையும், அதையும் மீறிக் கண்ணில் இருந்த ஏதோ ஒன்றும் கட்டிப் போட்டது.

பிள்ளைகளுக்காக மாலையில் வந்திறங்கிய பட்டாசும், இனிப்புப் பாக்கட்டுகளும், தீபாவளி இனாமும்( ஹி ஹி வாழ்க்கையில் முதன் முதலில் எனக்கெ எனக்காக ஒரு பத்துரூபாய்த் தாள்) விட ‘இப்புடு வீடு’ (இப்போது இவன்) என்று ஒன்றொன்றாக ஒரு பிள்ளைகளையையும் விடாமல் முறைவைத்து குழந்தைகளோடு குழந்தையாய் வேட்டு விட்டதும், ரசித்ததும் மறக்கவே மறக்காது. பட்டாசு வெடிப்பதை விட நான் அவரை உள்வாங்கிக் கொண்டிருந்தேன்.

தீபாவளியன்று அதிகாலையில் தன் உதவியாளருடன் ஒவ்வொரு குடித்தனமாக வந்து வெளியே நின்றபடியே உதவியாளர் மூலம் இனிப்பைப் பகிர்ந்து தீபாவளி வாழ்த்துச் சொல்லி விறைத்த கைககளைக் கூப்பியபோது நெகிழ்ந்து போகாதவர் யார்? ஒரு சிலர் உள்ளே அழைத்தபோதும், அந்த அழகிய சிரிப்புடன் மறுத்து அடுத்த வீட்டுக்கு நகர்ந்தபோது அவர் பின்னால் ஒரு வாண்டுப் படையே போனது. பட்டாசாவது மண்ணாவது.

மதிய உணவுக்கு பெத்தம்மா கேரியரில் கொண்டு வந்து, ‘வத்து வதினாவை’ (வேண்டாம் அண்ணி) புறந்தள்ளிப் பரிமாரியபோதும், சாப்பிட வாகாக உள்ளங்கையில் உருட்டி வைத்தபோதும், பெத்தம்மாவின் முகம் எப்போதையும் விட கொள்ளையழகு. அதைவிட அழகு, போதுமென வாய் சொல்ல நீண்ட கையுடன் சிட்நானாவின் கண்கள். அதன் பிறகு நாங்கள் வீடு மாறிப் போனதும் பிறகு எனக்கு வேலை கிடைத்தபின் அதே வீட்டில் குடி வந்ததும் ஏறக்குறைய எட்டு வருடங்களுக்குப் பிறகு நடந்தது.

ஹரி மெர்ச்சண்ட் நேவியில், முரளி படிப்பை நிறுத்தி ஏதோ கடையில், சுந்தர் கல்லூரியில். எங்கள் நட்போ ஹாய், ஹலோவில். இந்த முறை சிட்நாநா வருவதை பெத்தநாநாதான் சொன்னார். கேட்டதும் மனதில் எப்படி இருக்கிறாரோ என்ற ஒரு வருத்தம் தோன்றியது. டாக்ஸியில் வந்து இறங்கிய சிட்நாநாவுக்குப் பின்னே ஒரு யுவதியும், ஒரு குழந்தையும். இன்னொரு டாக்ஸியில் உதவியாளர்கள் வந்திறங்கினர். ரொம்பவே மாறியிருந்தார் சிட்நாநா. புருவம் அறவே இல்லை. இமைகளோ ஒரு கோடாய். மூக்கிருந்த இடத்தில் இரு துவாரங்கள். கூப்பிய கைகளில் ஓரிரண்டு விரல்கள் மட்டும். ஆனால், அந்தச் சிரிப்பும், கண்ணும் மாறவேயில்லை.

‘அரேரே! பாலாஜிகாதுரா நுவ்வு? பாகுன்னாவா?’ என்ற விசாரிப்பில் அதிர்ந்துபோனேன். வெறும் இரண்டு நாள், அதுவும் எட்டு வருடங்களுக்கு முன் கூட்டத்தில் ஒரு சிறுவனை கவனம் வைத்துக் கொள்வது பெரியது. அதிலும் இன்னார் என அடையாளம் காணமுடிவது பெரிய ஆச்சரியம். அன்றைக்கு பெத்த நாநாவின் மகள் கஸ்தூரி அக்காவின் மூலம் சின்நாநாவின் முழுப் பரிமாணமும் புலப்பட்டது.

சிறு வயதில் வீட்டில் காசு திருடியதற்காக தாத்தையா அடித்த அடியில் மும்பைக்கு ஓடியவர். ஓடியவருக்குப் புகலிடம் வேறென்ன? எப்படியோ வாலிபத்திலேயே தமிழர் வாழும் ஒரு பகுதிக்கு தாதா. கடவுள். பல பிள்ளைகளுக்கு கல்வி, திருமணங்கள், மருத்துவ உதவி. மதம் மொழி வேறுபாடின்றி தந்த ‘நாராயண் பாயி’ கடவுள். செல்வாக்கான மனிதர். அவர் கட்டுப்பாட்டுக்குட்பட்ட பகுதியில் ‘கண்பதி’ ஊர்வலமோ, சந்தனக் கூடோ, குருத்தோலை ஊர்வலமோ சிட்நாநாதான் ஸ்பான்ஸர்.

சிட்நானாவுடன் வந்திருப்பவர் அவருடைய உதவியாளர் ஒருவரின் காதலி. மதம் வேண்டாமே. இந்த நாய் அவளுக்குக் குழந்தையை கொடுத்துவிட்டுத் தலை மறைவானது. வீட்டை விட்டும் விரட்டப் பட்டிருக்கிறாள். இதெல்லாம் அறியாமலே ஓடியவனைத் தேடும் மும்முரத்தில் இருந்தவருக்கு அவன் வேறொரு குழுவில் இணைந்திருப்பது தெரிய வந்திருக்கிறது. ஏதோ கேஸில் சிக்கி ஜெயிலுக்கும் போய்விட்ட நிலையில் இவளைப் பற்றியத் தகவல் தெரிந்தபோது எட்டு மாதக் கர்ப்பிணியாம். ஒரு சேரியில் ஒரு தடுப்பில், கூலி வேலை, வீட்டு வேலை செய்து பிழைப்பதை அறிந்திருக்கிறார்.

பணக்காரர். தாதா. அவளை ஏமாற்றியவனும் இவருடனில்லை. யாருக்கான வாழ்வையோ யார் மூலமோ அமைக்கிறதே விதியோ, தெய்வமோ ஏதோ ஒன்று. பெற்றவர்கள் விரட்டியவளுக்கு தந்தையானார். பிறந்த பெண் குழந்தையை தன்னுடைய பொறுப்பில் எடுத்துக் கொண்டார். மனிதம் மொத்தமாகப் போய் விடவில்லையே. இவளுக்கு வாழ்வாதாரம் தர சிட்நாநா என்றால், அங்கம் சுருங்கி, அவயங்கள் இற்று விழ முடங்கிப் போன சிட்நாநாவுக்கு இவள் தாயானாள்.

சொந்த அண்ணன் வீட்டில் கூட நுழையாமல், தனித் தட்டு, டிஃபன் கேரியர் சாப்பாடு, அஸ்பெஸ்டாஸ் கூரையில் தங்கல் என்றிருந்தவரை யாரோ ஒரு பெண் தொட்டுத் துடைக்க, உணவூட்ட அனுமதித்திருப்பாரா என்ன? போராடி வென்றிருக்கிறாள் அவரை. ஒரு மாலை வேளையில், அவளையும் அவள் பிள்ளையையும் ‘நா கூதுரம்மா. நா மனவராலு’ (என் பெண்ணம்மா. இது என் பெயர்த்தி) என்று பெருமையோடு அறிமுகம் செய்தது அற்புதம். அந்தப் பெண்ணின் முகத்தில் ‘என் அப்பா’ என்ற பெருமை.

அடுத்த வருடம் சிட்நாநா இறந்து போனார். எப்போதும் சிரித்திருக்கும் பெத்தநாநா கண்கலங்கியது அந்த ஒரு முறைதான். அந்தக் குழந்தை டாக்டராக இருப்பதாக சில வருடங்களுக்கு முன் தன் மகனின் திருமணத்துக்கு அழைக்க வந்த கஸ்தூரி அக்கா சொன்னார். 
 ~~~~~~~~~~~~~

Wednesday, November 24, 2010

பாரம்பரியக் கோவணம்...

இழுத்துக் கட்டிய கம்பியில்
வந்து விழுந்தது துவைத்த அரையாடை
சற்றே முகம் சுளித்து யார் நீ என்றது
பக்கத்திலிருந்த பழந்துணி..

நீரில் நனையேன்
நின் போல் சிறு நெருப்பில் கருகேன்
நிர்வாணம் தவிர்க்க நினைப்போர்க்குக்
காவலன் நான்..நீச்சலுடை நானென்றது..

‘கட்டவே’ முடியாத நீயெல்லாம்  காவலனா சீச்சீ

பாட்டனின் பட்டாயிருந்து
பாதி பாதியாய்க் கிழிபட்டுப்பட்டு
இற்றுப் போயிடினும் இனி தைக்க
இடமின்றிப் போயிடினும்

ஒட்டுப் போட்டாலும்
ஓட்டையே விழுந்தாலும்
‘கறை’யே இருந்தாலும்
‘கரை’ உண்டென்ற

கோபுரம் உண்டெனக்கு
கோவணம் எனது பெயர்.
பகட்டுக்கு என்னருகில் இடமில்லை
பறந்துவிடு என்றது..

சுழன்றடித்த காற்றில்
நழுவியது அரையாடை
படபடத்த பட்டுக் கோவணம்
பாதி பிரிந்த கம்பியில் சிக்கிக் கிழிந்தது..

சேதாரமில்லையெனக்கென  சிரித்தது அரையாடை

பாதியாய்க் கிழிந்தாலும் வரும்
பரம்பரைக்கும் காவலன் நான்
படபடத்துச் சிரித்தது
பாரம்பரியக் கோவணம்..

~~~~~~~~~~~~~~~

Saturday, November 20, 2010

நாடாமை..தீர்ப்ப மாத்திச் சொல்லு...

நாத்து 8:சட்டம் ஒரு இருட்டறை என்பது பெரும்பாலும் அனைவரும் கூறும் ஒன்று. காரணம், நீதி சாட்சிகளையும், சந்தர்ப்பங்களையும் மட்டும் கணக்கில் கொண்டு தன் கடமையைச் செய்யும். உணர்ச்சிகளுக்கு அங்கே வேலையில்லை. சில நேரம் நிஜம் ஒரு பக்கம் சாட்சியின்றி பூதாகாரமாய்த் தெரியும். சாட்சியுடன் இன்னொரு நிஜமும் சட்டத்தின்படி பொய்யாய் வெருட்டும். இரண்டு நிஜத்தில் எதைத் தள்ள முடியும்? அங்கேதான் நீதிபதியின் திறமையும் மனிதமும் வெளிப்படும் தருணம். அத்தகையதோர் நிகழ்வு இது.

திருவாளர் ’எக்ஸ்’ ஒரு மெயில் டிரைவர். சென்னையில் பணிபுரிகிறார். மனைவியின் பெயர் ’ஒய்’. இந்து சாஸ்திரீய முறைப்படி நடைபெற்ற திருமணம். ஆதாரமாக மனைவி திருமதி ‘ஒய்’ என்று திரு. ‘எக்ஸ்’ அலுவலகத்தில் கொடுத்த தகவல்கள் இருக்கிறது. திருமணம் ரிஜிஸ்தர் செய்யப்படவில்லை. இவர்களுக்கு குழந்தையில்லை.

பணி நிமித்தம் ஒரு ரயிலை ஓட்டிச் சென்று பாலக்காடில் ரிலீவ் ஆகி ஓய்வுக்குப் பின் சென்னை திரும்புவது வழக்கம். யாராவது ‘ஒய்’ என்ற பெயரில் கிடைப்பார்களா? அவரும் தன்னை விரும்புவாரா என்று விளம்பரம் கொடுத்தா தேடிப்பிடிக்க முடியும். விதி என்று சொல்லலாமா? அப்படி ஒருவர் கிடைத்தார். பரம ஏழை. சிறுவயது. பெயரும் ‘ஒய்’. அய்யா பணி முடிந்ததும் அவர்கள் வீட்டில் தங்குவார். ஒரு கட்டத்தில் அந்தப் பெண்ணை கோவிலில் வைத்து திருமணம் செய்து ரிஜிஸ்தரும் செய்துவிட்டார். திருமணத்துக்குப் பின் இரண்டு குழந்தைகள்.

ஒரு நாள் கடமை முடிந்து பாலக்காட்டில் இருக்கையில் மாரடைப்பில் இறந்துவிட்டார். அந்த மனைவி உடலைப் பெற்று அலுவலகம் தந்த இறுதிக் கிரியைக்கான அட்வான்சும் பெற்று தகனம் செய்துவிட்டார். சென்னையில் இருக்கும் மனைவி, பணிக்குப் போன கணவன் ஒரு வாரமாகியும் திரும்பாததால் அலுவலகத்தில் விசாரிக்க, அவர் மரணித்ததும் அவர் மனைவி உடலைப் பெற்று ஈமக் கிரியை செய்ததும் தெரியவந்தது.

பதறிப்போய் தான்தான் மனைவியென்றும், இன்னொரு பெண்மணி எப்படி மனைவியாக இருக்க முடியுமென்றும் மனுச்செய்ய விசாரணையில்தான் இருவரும் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. அலுவலகம் என்ன செய்யும்? சட்டத்தைக் காட்டி சக்ஸஷன் சர்ட்டிஃபிகேட் கோர்ட் மூலம் பெற்று வரப் பணித்தனர். முதல் மனைவி வசதியானவர். ஆனால் திருமணம் பதியப்படவில்லை. சாட்சியாக பத்திரிகை கூட இல்லை. இரண்டாம் மனைவி ஏமாற்றப் பட்டிருக்கிறார் என்பது நன்றாகத் தெரிகிறது. ஆனாலும் சட்டப்படியான விவாகப் பதிவு இருக்கிறது. சிறு குழந்தைகள். நீதி மன்றம் விசாரணைக்கு உத்தரவிட்டு முதல் மனைவியின் திருமணத் தேதியை உறுதி செய்திருக்கக் கூடும். அதன் மூலம் இரண்டாவது திருமணம் செல்லாது என்று தீர்ப்பு வழங்கியிருக்கக் கூடும்.

தெய்வம் போன்று செயல்பட்டார் நீதிபதி. அதைவிட முதல் மனைவியின் புரிதல் அபாரமானது. பரஸ்பர புரிதலில், பி.எஃப், கிராச்சுவிட்டித் தொகை முதல் மனைவிக்கும், கருணை அடிபடையிலான வேலையும் பென்ஷனும் இரண்டாம் மனைவிக்கும் என்ற ஒப்புதலின் பேரில் முதல்மனைவி வழக்கை வாபஸ் பெற்றுக் கொண்டார். குழந்தைகளுக்கும் ஒரு ஏழைப் பெண்ணுக்கும் நீதி கிடைத்தது.

நாத்து 9
: கோர்ட்டையே ஏமாற்றும் அளவுக்கு படிப்பறிவற்ற பெண்ணால் முடிந்திருக்கிறது என்பது ஒரு ஆச்சரியம். ஓர் அதிகாரி அவர். மனைவியும் குழந்தைகளும் உண்டு. வீட்டில் பணிபுரியும் வேலைக்காரியுடன் தொடர்பிருந்ததைக் கண்டித்துப் பார்த்தும் கேட்காததால், குழந்தைகளின் நலன் கருதி மனைவி தனியாகப் போய்விட்டார். 

அதே வீட்டில் வேலைக்காரியுடன் அதிகாரி வாழ்ந்து ரிட்டயரும் ஆகிவிட்டார். பணிக்காலத்திலேயே மனப்பிறழ்வுக்காக மருத்துவ உதவி பெற்றிருப்பது தெரியும். கடைசிக் காலத்தில் கடனுக்கு பயந்து ஒரு நண்பரின் ரேடியோ ரிப்பேர் கடையில் தங்கியிருந்ததும், அதில் கிடைக்கும் சொற்ப பணத்தில் வாழ்ந்ததும், இந்தம்மணி பென்ஷனை ஆட்டையைப் போட்டுக் கொண்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

அவரின் மறைவுக்குப் பிறகு செட்டில்மெண்ட் மற்றும் பென்ஷனுக்கான விண்ணப்பத்தில் மனைவி என்று வேலைக்காரம்மாள் விண்ணப்பிக்கிறார். பணியில் இருந்த காலத்தில் தன் குடும்பத் தகவலைக் கொடுத்திருந்தார் அவர். அதில் இவரின் பெயரைக் குறித்து வேலைக்காரி என்றே குறிப்பிட்டிருந்தார். 

தகவலைக் குறிப்பிட்டு, மனைவி இன்னார், தங்கள் பெயர் வேலைக்காரியாக பதிவாகி இருக்கிறது திருமணத்துக்கு அத்தாட்சி ஏதும் இருக்கிறதா எனக்கேட்டு எழுதியவுடன் எப்படியோ முதல் மனைவிக்கு டைவர்ஸ் ஆன தீர்ப்பு நகல், அவர்களின் குழந்தைகளைப் பற்றிய தகவல்கள் தெரியாது என்பதுடன் தான் குருவாயூர்க் கோவிலில் திருமணம் செய்து கொண்டு அவருடன் வாழ்ந்து வந்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.

அலுவலகத்துக்கு அது குறித்த தகவல்கள் இல்லை. பிள்ளைகளுக்கு பென்ஷன் பெறும் தகுதியிருப்பதால் இவருக்குப் பென்ஷன் வழங்க முடியாது என்ற பதிலுக்குப் பின்னான அவரின் நடவடிக்கை பேரதிர்ச்சியானது. கோவிலில் திருமணம் நடந்த தகவல்களைக் கொடுத்து எந்த கோர்ட் டைவர்ஸ் கொடுத்ததோ அதே கோர்ட்டில் சட்ட பூர்வ மனைவியாக பாவித்து பென்ஷன் தரப்பட வேண்டும் என்ற ஆர்டரையும் பெற்று அனுப்பினார். 

அப்பீலில் டைவர்ஸ் குறித்தான தகவலைச் சொல்லாமல் விட்டிருந்தது தெரியவந்தது. அதைவிட திருமணம் நடந்த தேதி டைவர்சுக்கு முற்பட்டதானதால் சட்டப்படி செல்லாது. கொடுமை என்னவென்றால் இரண்டு தீர்ப்புக்கும் இடையில் மிகக் குறைந்த கால இடைவெளி. இரண்டுக்கும் ஒரே நீதிபதி.

முரண்களைச் சுட்டிக்காட்டி, கோர்ட்டுக்கும் அம்மணிக்கும் கடிதம் எழுதப்பட்டது. அப்புறம் தகவலேதுமில்லை.  

இவை அனைத்தும் பல்வேறு கால கட்டங்களில்  பல்வேறு கலாச்சாரச் சூழல்களில் நடந்த திருமணங்கள். ஆனாலும் பொதுவான ஒன்று திருமணம் அது பதிவுடனோ இல்லாமலோ  ஒரு பாதுகாப்பு இல்லை . எல்லா அலுவலக நாட்களிலும் திருமணப் பதிவு அலுவலகத்தில்  காசுக்கு சாட்சிக் கையெழுத்துப் போடுவதையே பிழைப்பாய் நம்பியிருக்கிறது ஒரு கும்பல். பெண்ணுக்கு சித்தப்பன், பெரியப்பன், மாமன் என்று மாற்றி மாற்றிக் கையெழுத்துப் போடுபவன்  வேறொரு பையனுக்கும் அதே போல் சாட்சி போட்டால் போதும் என்ற அமைப்பு இருக்கிறது.

அது  பெரியவர்கள் பார்த்து நடத்தும் திருமணமோ, காதல் திருமணமோ, சுயமரியாதைத் திருமணமோ எதுவாயினும் சம்பந்தப் பட்ட இருவரை வைத்தே அவர்களின் நல் வாழ்வு அமைகிறது. திருமணம் பெரிய பாதுகாப்பு ஒன்றும் கொடுத்துவிடவில்லை. ஏமாற்றுபவன் சட்டத்தையும் ஏமாற்ற முடிகிறது என்பதை புரிந்து கொள்ள முடியும்.

பெரும்பான்மையானோருக்கு இதில் சிக்கல் இல்லாமல் வாழ்க்கை நடத்த முடிகிறது. பலருக்கு இயலாமையால் சகித்துக் கொண்டு காலம் தள்ள அமைகிறது. மிகச் சிலருக்கு திருமண முறிவு தேட அவசியமிருக்கிறது. அதற்குப் பின்னான புரிதலோ மற்றொரு திருமணமோ வெகு சிலருக்கே அமைகிறது.

இருபது வருடங்களுக்கு முன் குசு குசுவென்று இன்னாரின் மகள் பதிவுத் திருமணம் செய்துகொண்டாள் என்று ஏளனமாகப் பேசப்பட்டது இன்று எந்தத் திருமணமானாலும் பதியப் படவேண்டும் என்றதும் ஏற்றுக் கொள்ளும் மனோபாவம் எப்படி வந்தது? சட்டத்திற்கு முன் என்ன கேவலமிருந்தது சட்டமயமானதும் தொலைந்து போக? 

மூன்று தலைமுறைக்கு முன்னால் உறவுகள் முன்னிலையில் தாம்பூலம் மாற்றி உரக்கச் சொன்னால் நிச்சயமான ஒரு திருமணம், இன்று காகிதத்தில் எழுதி பெற்றோர் மற்றும் சாட்சிகளின் கையெழுத்தோடுதானே உறுதியாகிறது? இதில் நமக்கு உறுத்தல் இருக்கிறதா?

ஆக ஒரு சட்டம் வந்து எந்த ஒன்றையும் அங்கீகரிக்கும் வரை நமக்கு ஏற்பு இல்லை. ஏற்பு என்று கூட சொல்ல முடியாது. சட்டத்தின் பாதுகாப்பிருக்கிறது. அவர்களைச் சீண்டினால் சட்டம் நம் மீது பாயும் என்ற பயத்துக்கு மட்டுமே அடங்கியிருப்போம்.  

~~~~~~~

Thursday, November 18, 2010

அப்ப இது என்னங்க?...

நாத்து 4: நாமக்கல் பக்கதுல பாலப்பட்டின்னு ஒரு சின்ன கிராமம். முன்சீப்புக்கு பெரிய பொண்ணு பிச்சம்மா. ஏழு வயசுல கலியாணமாச்சி. புருஷனுக்கு 13 வயசாம். அஞ்சு நாள் கலியாணம். கலியாணம் முடிஞ்சி ஊருக்கு போன புருஷன் ஒரு மாசத்துல தர்பப்புல்லு அறுக்கப் போய் பாம்பு கடிச்சி போய் சேர்ந்துட்டான். சாவுக்கு போனவள துக்கிரி முண்ட காலு வச்ச நேரம் (அவுங்க ஊட்டுக்கே போவல பொண்ணு) எம் புள்ளைய சாவடிச்சிட்டான்னு மாமியாக்காரி சாத்து சாத்துன்னு சாத்துச்சாம். மாமி அடிச்சிட்டான்னு கதற தெரிஞ்ச பிச்சம்மாக்கு புருஷன் போய்ட்டான். படிப்புதான் போச்சு. இனி அம்மா வீட்டுல ஒரு மூலையில ஒண்டணுமேன்னு எல்லாம் அழத் தெரியாத வயசு.

பிச்சம்மாளுக்கு மொட்டையடிக்கணுமுன்னு ஒத்தக்கால்ல நின்ன மாமியா வீட்டுக்காரங்களையும், அப்பனையும் பிச்சம்மாவோட தம்பியும் ஆத்தாக்காரியும் செத்துடுவோம்னு போராடி மொட்டையடிக்க விடாம செஞ்சுட்டாங்க. அம்மா வீட்டுல ஒரு இருட்டு ரூம்தான் உலகம் அவளுக்குன்னு ஆகிப்போச்சு. அதான் கஷ்டமிருக்கிறவங்களுக்கு பட்டு கழி நாயேன்னு ஆயுசு குடுப்பானே. அது இருந்துச்சு 79 வயசு வரைக்கும். அண்ணந்தம்பியே காப்பாத்தாத காலத்துல தம்பிங்க ரெண்டு பேரையும் பறி கொடுத்தப்புறம் என்னதான் தம்பி பசங்கள வளர்த்தாலும், தம்பி பொண்டாட்டி வச்சி காப்பாத்துமா என்ன. அதுவே பாவம் ஒரு ஊட்ல சமையல் செஞ்சி பொழைக்குது. புள்ளைல ஒருத்தன் படிப்பு வரலைன்னு ஹோட்டல்ல சர்வர். நீ போ தாயின்னு விட்டுட்டாங்க.

அதும் எங்கயோ கடைசி வரைக்கும் ஒரு ஊட்ல சமயல், எடுபிடின்னு சாப்பாட்டுக்கும் புடவைக்கும்னு உழைச்சி செத்துப்போச்சி. ஏன் பிச்சம்மா? உங்க வீட்டுக்காரர் பேரு கவனமிருக்கா எப்புடி இருப்பாருன்னு கேட்டேன். பேரெல்லாம் தெரியாது. ராஜான்னு கூப்புடுவாங்கன்னு கவனம். அஞ்சு நாள் கலியாணத்துல ஒரு நாள் பல்லாங்குழி ஆடுறப்ப ‘சோ’ தட்டிட்டாள்னு சண்டைல அடிச்சிட்டான்னு அவங்கூட ரெண்டு நாள் பேசலைன்னு சொல்லி சிரிச்சது.

நாத்து 5: பதிமூணு வயசு அலமேலுவுக்கு கலியாணம் ஆகும்போது அவ புருசனுக்கு வயசு 38க்கு மேல். மவளுக்கு 15 வயசு. கலியாணம் ஆகிப் போச்சு. அடுத்த மவளுக்கு 11, புள்ளைங்களுக்கு 5, 3. அவங்களுக்கு பொறந்தது பன்னெண்டு. அப்பல்லாம் ரிஜிஸ்டர் பண்றதில்லை. 70ம் வருஷம் புருஷன் போய்ட்டாரு. பாவி மனுசன் ஆஃபீஸில ரெண்டாம் கலியாணம் பண்ணத பதியல. புள்ளைங்க பென்ஷன் வராதுன்னு சொல்லிட்டு இருந்துட்டாங்க. தனி மனுஷியா போராடி போராடி எங்கயோ கிடந்த ஒன்னு ரெண்டு ஆவணங்கள கொடுத்து கோர்ட் அத்தாட்சி வாங்கி 15 வருஷத்துக்கு அப்புறம் குடும்ப பென்ஷன் வாங்கிச்சி. அந்த பதினஞ்சி வருஷ நரக வாழ்க்கை? அது பண்ண புண்ணியம் கிழவர் போனப்ப இது கிழவி ஆயிடுச்சி. சின்ன வயசுல போயிருந்தா?

நாத்து 6:ஒரு அம்மணிக்கு ரயில்வேல வேலை செஞ்ச வீட்டுக்காரர் இறந்துட்டாரு. பிள்ளைக்கு வேலை வேணும்னு இந்தம்மா தனக்கு கேக்கலை.  ரெண்டாவது கலியாணம் பண்ணலாம்னு பொண்ணு வீட்ல முடிவெடுத்தாங்க. கொஞ்ச மாசத்துல ஒரு டாக்டர் வந்து கலியாணம் பண்ணிக்கறேன்னு வந்தாரு. ரெண்டு பேர் வீட்டு சம்மதத்தோட கலியாணம் நடந்துச்சு. கலியாணம் பண்ணதால பென்ஷன் போச்சு. பசங்க பொண்ணோட அம்மா வீட்டில விட்டு குடித்தனம் ஆரம்பிச்சாங்க. அவங்க ரெண்டு பேரும் கொஞ்ச மாசத்துலயே ஒரு விபத்துல போய் சேரவும் ஆரம்பமாச்சி பிரச்சன. குழந்தைங்க வரக்கூடாதுங்கறான் புருஷன். அதுங்களுக்கு பணமும் தரமாட்டேன்னு சொல்லிட்டான். படிக்கிற பசங்க. அந்தம்மணி வந்து பசங்களுக்காவது பென்ஷன் குடுங்கன்னு கேட்டுச்சு. சட்டப்படி நேச்சுரல் கார்டியன் நீங்க உயிரோட இருக்கீங்க. அதனால கிடையாதுன்னு சொல்லிடுச்சி சட்டம். டைவர்ஸ் பண்ண முடியாது பெர்சனல் ரீஸன்னு அழுவுது. போலீசுல கம்ப்ளெயிண்ட் குடுங்க. அவங்க சட்டப்படி கோர்ட் ஆர்டர் வாங்கி கொடுப்பாங்கன்னா அதுக்கு டைவர்ஸ் பண்ணமாட்டனான்னு அழுது. டைவர்ஸ் பண்னாலும் ஒன்னும் கிடைச்சிருக்காது.

நாத்து 7: அந்தம்மணி புருஷன் ஒரு தத்தாரி. கலியாணம் ஆன புதுசுலயே சீட்டாடி, கல்லால கை வச்சி நகை நட்ட வச்சி கேசுல மாட்டாம காப்பாத்தினாங்க. வேலைக்கு போகாம பொண்டாட்டி சம்பளத்துல சாப்பாடு. அடிச்சி, உதைச்சி, காச புடுங்கி இல்லைன்னா திருடி சீட்டாட்டம். ஒரு பையன் ஒரு பொண்ணு. மாசம் இவ்வளவு தரேன். அதுக்குமேல சாவடிக்காதன்னு, அந்தம்மா குழந்தைங்களோட சென்னைக்கு வந்துடுச்சி. அந்தாளு ஊர்ல. சொந்த வீட்டுல இருந்தாரு. அந்தம்மா ஹார்ட் அட்டாக் வந்து மண்டைய போட்டப்ப பையனுக்கு 27 வயசு. படிப்பு முடிச்சும் வேலை கிடைக்கல. பொண்ணுக்கு கலியாணம் ஆயிடுச்சி.

அய்யா வந்தாரு. கொள்ளி போட்டாரு. நகையை அடமானம் வச்சு காரியம் பண்ணாரு. மனுஷன் கில்லாடி. அப்பன் தறுதலை. எங்கம்மாதான் வளர்த்துச்சி. பணம் குடுக்காதீங்கன்னா ஒரு மண்ணாங்கட்டியும் கிடைக்காது. சட்டப்படி நாந்தான் புருஷன். எங்களுக்கு அப்ஜக்‌ஷன் இல்லைன்னு கையெழுத்து போட்டுக் குடுங்கன்னு பொண்ணு பையங்கிட்ட டீல் போட்டாரு. இன்சூரன்சு, நகை நட்டு எல்லாம் பொண்னுக்கு. பி.எஃப்.,க்ராச்சுவிடி பணம் பையன் பேருல போட்டு மாச வட்டி. அதுக்கு மேல மாசாமாசம் கொஞ்ச பணம் பென்ஷன்ல இருந்து குடுக்கறதா பேச்சு.

எல்லா ஃபார்மாலிட்டியும் முடிச்சி, செட்டில்மெண்டும் வாங்கிட்டாரு. அப்பவும் ஒரு நப்பாசை. பையனுக்கு கருணை அடிப்படையில வேலை கிடைக்க சான்ஸ் இருக்கான்னு. ஏன்னா வேலை கிடைச்சா க்ராச்சுவிட்டியும் ஆட்டைய போட்டுக்கலாம்னு டீலு. ப்ச். சட்டத்துல வழியில்லை. பே கமிஷன் அரியர்ஸ் வந்தப்ப அந்தப் பணத்துக்கும் பங்கு கேக்குறாங்க சார். என்னா அனியாயம்னு தெனாவட்டா அந்தாளே சொன்ன தகவல் இது.  

(இதுவும் உண்மைச் சம்பவங்கள்தானுங்க. அந்த மூணும் நாத்தில்ல களைன்னு சொல்லிட்டீங்க. இதாச்சும் தேறுமா பாருங்க)

Tuesday, November 16, 2010

சரியா தவறா?

நாத்து 1: எங்கள் அலுவலகத்தின் மூத்த அதிகாரி அவர். பிரசவத்துக்குத் தாய் வீட்டுக்குப் போகிறார் மனைவி. ஆண்குழந்தை. முதல் குழந்தை. குறிப்பிட்ட காலம் சென்றும் தன் வீட்டிற்கு வரும் பிரயத்தனமே தெரியாததால் கேட்கிறார். பெரிய அதிர்ச்சி. மனைவியை இழந்த வயதான தகப்பனையும், பால்ய விவாகத்தில் கணவனை இழந்து தம்பியோடு இருந்த அத்தையையும் உதறிவிட்டு தனிக்குடித்தனம் வந்தாலேயொழிய சேர்ந்து வாழ்வது என்ற பேச்சுக்கே இடமில்லை என்கிறார் மனைவி.

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தனாய் சேர்ந்து வாழ அழைப்பதும், மறுத்தாலும் செலவுக்கும், பிள்ளையின் படிப்புக்கான அனைத்து செலவையும் செய்து வருகிறார். ஒன்றல்ல இரண்டல்ல, 17 வருடங்களுக்குப் பின் பேரதிர்ச்சி காத்திருக்கிறது. தன்னை நிராதரவாக விட்டதாகவும், தனக்கும் தன் குழந்தையின் பராமரிப்புக்கும் ஏதும் செய்யவில்லை என்றும் காரணம் காட்டி விவாகரத்து வழக்கு தொடுக்கிறார் மனைவி. 

கொடுமையிலும் கொடுமையாக ஃபீசுக்கும், துணிக்கும், இதர தேவைக்கும் வந்து பணம் வாங்கிச் செல்லும் கல்லூரி வயது மகனே குடும்ப நல கோர்ட்டில் தன் தந்தை தன் படிப்புக்கு ஏதும் உதவவில்லை என சாட்சி சொன்ன பிறகு சட்டம் விவாகரத்தும் மாதாந்திர ஜீவனாம்சம், மகனுக்கான கல்விச் செலவு என்று பல நிவாரணங்களும் அளிக்கிறது.

அந்த காலகட்டத்தில்,பாரிசவாயுவினால் படுத்த படுக்கையாகிவிட்ட தகப்பனுக்கும், பர்கின்ஸன்ஸ் அத்தைக்கும் குளிப்பாட்டி,மலம் மூத்திரம் சுத்தி செய்து, சமைத்து, அவர்களுக்கு சாப்பாடு கொடுத்து, நிரம்பவும் பொறுப்பான அலுவலக வேலையும் செய்ய வேண்டிய சூழல். 

பச்சையேறிய பித்தளை செயினும், இத்துப் போன கவரிங் தோடுகளுமாய் பரிதாபமாக வருவார் அம்மணி, சம்பளப் பிடித்தம் செய்தாகிவிட்டதா, செக் நம்பர் கொடுங்கள் என்று. ஒரு முறை அலுவலக மாடிப்படி அருகில் நகைகளைக் கழற்றி பர்சுக்குள் வைத்துக் கொண்டு, ஈயம் பித்தாளை நகைகளை அணிந்து கொண்டு சற்று நேரத்தில் செக் நம்பர் கேட்டு வந்ததும் திகைத்துப் போனேன்.

என்ன சொல்லி என்ன, மனைவிக்கும் குழந்தைக்கும் கொடுக்கும் காசுக்கு சாட்சியா வைக்கமுடியும். சுப்ரீம் கோர்ட் வரை போயும் கீழ்க் கோர்ட்டின் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது.

நாத்து 2: சைவ வேளாளர் பையன் சைவ நாயுடு பெண்ணைக் காதலிக்கலாமோ? பெற்றோருக்கு பிடிக்கவில்லை. நல்ல வேலையில் இருந்த மகன். இரண்டு தம்பிகளின் எதிர்காலம் என்னாவது. மூத்த அண்ணன் ஓடுகாலி என்று தெரிந்தால் அவர்களுக்கு யார் பெண் கொடுப்பார்கள். பையன் வேலைக்குப் போகாமல் வீட்டில் அடைந்தான். ஜாதகம் காட்டியதில் கலியாணம் செய்த பின் சரியாகிவிடுவான் என்று ஜாதகம் சொல்லிவிட்டது. 

அப்புறமென்ன? சொந்த ஜாதியில், திருமணம் செய்து கொடுக்க வசதியற்ற பெண்ணைப் பெற்றவன் இல்லாமலா போய்விடுவான்? திருமணமானது. மன அழுத்தத்திலிருந்த அய்யாவும் வாழ்க்கையைத் தொடங்கினார். மனைவி ஓரிரு மாதத்திலேயே கருவுமுற்றார். திரும்பவும் அய்யாவுக்கு மன அழுத்தம் அதிகமாகி, முரட்டுத் தனமாக அடிப்பது, தன்னைக் காயப் படுத்திக் கொள்வது என்ற அளவுக்கு முத்திப் போக கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவ மனையில் அனுமதிக்கப்படுகிறார்.

கிட்டத் தட்ட பத்து வருட சிகிச்சைக்குப் பின் பூரண குணமடைந்ததாக ஆஸ்பத்திரியிலிருந்து வருகிறார். அடுத்த குழந்தைக்கும் அச்சாரம் போட்டாகிவிட்ட நிலையில் திரும்பவும் இன்னும் தீவிரமான மன அழுத்தம். மீண்டும் மனநல மருத்துவமனை. இந்த முறை சிகிச்சை எந்தப் பலனும் அளிக்காது என்ற நிலையில் நிரந்தர மருத்துவமனை வாசம்.

இடையில், மாமியார், மாமனார் இறந்துவிட மற்ற மகன்கள் வீட்டை விற்று பங்கு போட்டுக் கொள்கிறார்கள். படிப்பறிவற்ற அண்ணன் மனைவி குழந்தைகளுடன் தெருவில் நின்றால் யாருக்கென்ன போச்சு? கோர்ட் கேஸ் என்று அலைய எந்த நாதியிருக்கிறது? சரி மனநலம் குன்றிய மகனுக்கு பென்ஷனாவது கிடைக்குமா என்று வருகிறார் ஒரு நல்லிதயக்காரர்.

சட்டம் சொல்வது என்ன: தந்தை பணியில் இருக்கும்போதே மகனுக்கு சித்த சுவாதீனமில்லாமல் போயிருக்க வேண்டும். திருமணமாகி இருக்கக் கூடாது. வாஸ்தவம்தானே. அரசு என்ன மக்கள் பணத்தில் தான தருமமா செய்ய முடியும்? வெயிட்டீஸ்

நாத்து 3: திருமணமாகி, விதவையான, குறிப்பிட்ட அளவுக்கு மேல் மாத வருமானமற்ற மகள் தாய்வீட்டுக்கு வருவாளேயானால், எத்தனை வயதானாலும், விதவையானது எப்போதானாலும், பெற்றோரின் மறைவுக்குப் பிறகு வேறு யாருக்கும் உரிமையில்லாத பட்சத்தில் அந்த மகளுக்கு கொடுக்கப்படவேண்டும் என்று சட்டம் வருகிறது. இதற்கு விளக்கம் வேறு, தாய்வீட்டிற்கு வரவேண்டும். மாமியார் வீட்டோடு இருந்தால் கிடையாது. 

ஹி ஹி. அப்பனும் போய், ஆத்தாளும் போய், வாடகை வீட்டில் இருந்தவங்களுக்கு தாய்வீடு எதுப்பா என்று யாரைப் போய் கேட்பது. மகனோ மகளோ கோடீஸ்வரியாக இருக்கலாம், இவருக்கே பங்களாக்கள் சொந்தமாக இருக்கலாம், ஆனால் தாய்வீட்டுக்கு வந்துவிட்டேன். எனக்கு மாத வருமானம் இல்லை அல்லது இவ்வளவுதான் என்று அஃபிடவிட் கொடுத்துவிட்டால் போதும். ஆயுள் முழுதும் பென்ஷன் உண்டு.

சரி அது என்ன நாத்து அப்படிங்கறீங்களா? முதல்ல இந்த மூணுக்கும் உங்க தீர்ப்பைச் சொல்லுங்க. இது சரியா தவறா? என்ன செய்திருக்கலாம் அல்லது செய்திருக்க முடியும்? 



(டிஸ்கி: மேலே குறிப்பிட்ட மூன்றும் கற்பனையல்ல. நிஜமான கேஸ்களும், சட்டமும்)

Sunday, November 14, 2010

கேரக்டர் ராம்ஜி...

நம் எல்லோர் வாழ்விலும் ஒரு காலகட்டத்தில் திரும்பிப் பார்க்கையில் நம்மையறியாமலே நமக்கு திருப்புமுனையாக அமைந்த ஒரு நபர் இருப்பார். ஏதோ ஒரு வகையில் அவரின் தாக்கம் நம்மைச் செம்மைப் படுத்திக் கொள்ள தூண்டுகோலாயிருந்திருக்கும். வேலையில் சேரும் வரை மாவட்ட நூலகத்தில் வாழ்க்கை என்றிருந்த காலம். வேலை கிடைத்தாலும் எதையோ பறிகொடுத்த தவிப்பிருந்தது. ஓரிரு மாதங்கள் அலுவலகம் பழக்கமாகி ஒரு நாள் கண்ணில் தென்பட்டது தலைமை அலுவலக ஊழியர் நூலகம் என்ற அறிவிப்பு. மெதுவே எட்டிப் பார்த்தால் சுவற்றோரம் எட்டடி உயர தேக்கு அலமாரியில் கண்ணாடிக்குப் பின்னால் பழுப்பேறி தடி தடியான பொக்கிஷங்கள். வெள்ளைக்காரன் விட்டுப் போனவை. அட்டை கிழிந்து பக்கம் தொங்கியபடி பழைய ஆங்கில நாவல்கள். புதுசும் பழசுமாய் தமிழ், தெலுங்கு,கன்னட, மளையாள நூல்கள்.

பத்தடி மேசையில் இறைந்து கிடந்த புத்தகங்களின் நடுவே அமர்ந்திருந்தார் அந்த மனிதர். தயங்கித் தயங்கி உறுப்பினராகப் படிவம் கேட்டேன். அமைதியாக எடுத்துக் கொடுத்த படிவத்தை நிரப்பி, மேலதிகாரி கையெழுத்துடன் அடுத்த நாள் கொடுத்து உறுப்பினராகி, கிடைத்த கிழிந்த புத்தகங்களை படிக்கத் தொடங்கி ஓரிரு வாரம் சென்றது. திரும்ப வந்திருந்த புத்தகங்களில் ஏதேனும் தேறுமா என்று தேடுகையில் மொழிவாரியாக பிரித்து அடுக்கியது அவருக்கு வித்தியாசமாகப் பட்டிருக்க வேண்டும். முதல் முறையாக பேசினார். பெயர், அலுவலகம் விசாரித்து, தானும் அக்கவுண்ட்ஸ் என்றும் எமெர்ஜென்ஸி பீரியடில் ஸ்பெஷல் செல்லில் பணிபுரிவதாகவும் கூறினார்.

அடுத்து வந்த நாட்களில் பழகி, அன்றாடம் புத்தகம் அடுக்க உதவி, ஒன்றாகக் கிளம்பியபோது இருவரும் அயனாவரத்திலிருந்து வருவது தெரிந்தது. ஒரே பஸ் ஸ்டாண்டுக்கு வந்து காத்திருக்கையில் குடும்பம் குறித்த விசாரணையில் அடுத்த ஆச்சரியம் பூத்தது. எனக்கான வினோத அனுபவத்தின் முதல் அனுபவம் அது. என் தந்தையுடன் பணி புரிந்து என் சக ஊழியனாக, எனக்கு அதிகாரியாக, நான் அவர்களில் ஒரு சிலருக்கு அதிகாரியாக என்று இன்னமும் தொடரும் ஓர் சங்கடம் அது. விபரம் புரியாத வயதில் தொலைத்த தந்தையைப் பற்றி மனம் நிறைய சந்தோஷத்துடன் நினைவு கூறக் கேட்பதைப் போல் சுகமென்ன இருக்க முடியும்?

ராமச்சந்திரராவ் அப்படித்தான் எனக்கு அறிமுகமானார். ஆறடிக்கும் மேல் உயரம். செக்கச் செவேலென்ற நிறம். ராமனை வர்ணிக்கும்போது உள்ளங்காலும் கையும் தாமரை என்பார்களே அப்படி ஒரு சிவப்பு. சற்றே சிறுத்த தலை. முப்பத்தைந்து வயதிலேயே பின்பக்கம் மட்டும் கொஞ்சம் முடி. ஒல்லியான ஆனால் வலிமையான தேகம். காலில் ஸ்பிரிங் கட்டியதுபோல் துள்ளித்துள்ளி வேகமான ஒரு நடை. சில மாதங்களில் எங்கள் அலுவலகத்துக்கே மாற்றலாகி வந்தார்.

தினசரி அவருக்கு உதவுவதும் ஒன்றாய்க் கிளம்புவதும் வேறொரு விதத்தில் அனுகூலமானது. அலமாரியில் வைத்தால் திருடிக் கொண்டு போய்விடுகிறார்கள் என்று மேசை அறைக்குள் இருந்து புதிய புத்தகங்கள் கிடைத்தது. ஆங்கிலப் புத்தகம் படி என்று முதன் முதலில் தேடி எடுத்துக் கொடுத்ததுதான் ‘Sesame and Lillies'. அதைப் படிக்க வைத்து, விவாதித்து, புரிய வைத்து ஆங்கில நூல்களின்பால் பைத்தியமாக்கிய புண்ணியவான்.

 சில மாதங்களில் அமீபியாஸிஸ் வந்து உடல் நிலை சரியில்லாமல் போக, துணைக்கு நான் காலையில் அவர் வீட்டிற்குப் போய் அவருடன் கிளம்பி, மாலையில் அவர் வீட்டில் விட்டு என் வீடு சேர்வது வழமையாயிற்று. அவர் நண்பர் ஒரு டெய்லர் இருக்கிறார். புதியதாகத் துணி வந்தால் ‘ராவ்! பாருய்யா என்பார்’. அலுவலகம் செல்லும் அவசரத்திலும் ஒரு துணியைத் தேர்ந்தெடுத்து விட்டு கிளம்பினால் மதியம் நாங்கள் இருவரும் அரை நாள் சி.எல்.

வீட்டுக்கு வரும் வழியில் தைத்து ரெடியாயிருக்கும் சட்டையை வாங்கிக் கொண்டு சாப்பிட்டு டெய்லரோடு கிளம்பினால் ஏதோ ஒரு புதிய ஆங்கிலப் படம் நிச்சயம். சென்னையின் பிரபல தியேட்டர்களில் படம் ரிலீசான முதல் இரண்டு நாட்களில் வார் பிக்சர் போட்டு 10 நிமிடம் வரை இவர்களுக்காக இரண்டு அல்லது மூன்று டிக்கட்டுகள் ப்ளாக்கில் விற்பவர்கள் வைத்திருக்கும் அளவு பிரசித்தம். ஒரு முறை ப்ளூ டைமண்டில் பத்துமணிக் காட்சி, ஆனந்தில் மாட்னி, தேவியில் மாலைக் காட்சி முடித்து காசினோ தியேட்டரில் இரவுக்காட்சியும் பார்த்தது உண்டு.

‘உங்கப்பாவிடம் கற்றுக் கொண்ட பைத்தியம் இது’ என்று  வகை வகையாக பேனா வாங்கியதைக் காட்டியபோது இழந்த என் இளம்பிராயம் மீண்டது எனக்கு. பாரிமுனையில் பென்ஸ் கார்னரின் நிரந்தர வாடிக்கையாளர்கள் நாங்கள். ஒரு கட்டத்தில் ரெடிமேட் பேனாக்கள் சலிப்பேற்படுத்த பூக்கடை வாசலில் பால் பேனா விற்பவர் ஒருவரைப் பிடித்து எங்களுக்கான பேனாக்களை டிசைன் செய்து வாங்கிய காலம் அது.

புதியதாக 20ம் எண் தடத்தில் எக்ஸ்ப்ரஸ் பஸ் சர்வீஸ் விட ஆரம்பித்ததும், ஒன்பது ஐம்பத்தைந்துக்கு பஸ் பிடித்தால் பத்து ஐந்துக்கெல்லாம் அலுவலகம் சேர்ந்துவிட முடிந்தது.  ‘நாளையில இருந்து ரெகுலர் பஸ்ல போலாம்யா. தினம் 2ரூபாய் வேஸ்ட்’ என்பார். எட்டரைக்கெல்லாம் அவர் வீட்டில் இருப்பேன். ‘போகலைய்யா. தோ கிளம்பிடலாம்’ என்று காலைக் கடன் முடித்து, குளித்து, பூசை செய்து சாப்பிட்டு அதே எக்ஸ்ப்ரஸில்தான் கிளம்புவோம்.

சில நாட்கள் மாலையில், ‘இன்னைக்கு நடந்து போலாம்யா வீட்டுக்கு. பஸ்ஸுக்கு குடுக்கிற காசில் ஒரு ஆப்பிள் சாப்பிட்டபடி நடந்தால் போச்சு’ என்று கிளம்புவார். மூர்மார்க்கட்டில் இரண்டு ஆப்பிள் வாங்கிக் கொறித்தபடி தாசப்ரகாஷ் வரை நடந்ததும், ‘லேசா பசிக்குது வா! என்று க்ரீன்பீஸ் மசாலா, ரோஸ்ட், காஃபி என்று கொள்ளைக் காசு தண்டம் அழுது, ‘ஹெவியாயிடிச்சில்ல. ஆட்டோ பிடி’ என்று வீடு சேர்வோம் பல நாள்.

எப்படியோ, பத்மா சுப்ரமணியம் குழுவில் வயலினிஸ்டாக இருந்த பாபு என்பவர் இவருடைய அத்தைமகன் என்பது தெரிய வந்ததும் ஆஃபீஸிலிருந்து அடிக்கடி மந்தவெளி பஸ் ஸ்டேண்ட் எதிரில் இருந்த மேன்ஷனுக்கு போவது என்றானது. பிரபல வயலின் வித்துவான் டி.என். கிருஷ்ணனின் சீடர் அவர். போதாத காலத்துக்கு நம்மாளுக்கு வயலின் கற்றுக் கொள்ள ஆசை பிறந்தது. என்கேயோ சொல்லி, ஒரு ஸ்டாடிவேரி வயலினை வாங்கி, கச்சேரி வீதியில் பிரித்து ஒட்டி, வயலினும் ரெடியானது. வாரம் ரெண்டு நாள் மேன்ஷனில். ஞாயிறு காலை பாபு இவர் வீட்டில் வந்து சாப்பிட்டு, வயலின் கற்றுக் கொடுத்து, இரவு உணவு முடித்து திரும்புவது என்று ஏற்பாடானது.

பூவோடு சேர்ந்த நாரும் என்பது போல் நானும் கற்றுக் கொள்ள ஆரம்பித்து, சரளி வரிசை, ஜண்ட வரிசை தாண்டி, மோகன நின்னுக்கோரி தந்த தைரியத்தில், நாட்டக் குறிஞ்சி ‘சல மேல ஜேசேவய்ய’வில் ஸ்வரம் வராமல் அவர் வாயிலிருந்து எச்சில் வயலினில் வழிந்ததுதான் கண்டபலன். வயலின் வாசிக்க வந்ததோ இல்லையோ, ரயில்வே கன்ஸஷன் டிக்கட் ரிஸர்வ் செய்து கொண்டு போய் கொடுக்கும் சாக்கில், என்னால் நாட்டியம், கச்சேரி ஓசியில்  மேடையில் கேட்க முடிந்தது.

அருமையான ஆங்கிலத்தில் அடித்தம் திருத்தம் இன்றி எழுதுவார். அதுவும் ஸ்க்ரிப்ட் ஃபாண்ட் போல் வெகு அழகாக இருக்கும் எழுத்து. பல சட்ட நுணுக்கங்களைப் பற்றி சொல்லிச் சொல்லி எனக்குள் என்னையறியாமல் பல நுணுக்கங்களை ஏற்றிவிட்ட புண்ணியவான். அதன் மீதான ஆர்வமே என் முன்னேற்றத்துக்குக் காரணம் என்பதை மறுப்பதற்கேயில்லை. பின்னாளில் அவருக்கு அடுத்த பதவியில் இருக்கையில் அவருடனான வாதத்தின் போது ‘ங்கபார்ரா! நான் சொல்றப்ப வாய்ல ஈ பூந்தது தெரியாம கேட்டுண்டிருந்த பய எனக்கு சொல்லித்தரியா?’ என்று சிரிக்கையில் ஒரு வாஞ்சையிருக்கும்.

அத்தனை திறமையிருந்தும் ஏனோ அவரால் அலுவலகப் பரிட்சையில் தேற முடியாமல் போய்விட்டது. நன்றாகத் தயார் செய்திருக்கும் காலங்களில் வெள்ளம் என்று தள்ளிப் போய்விடும் பரீட்சை. அல்லது இவருக்கு உடம்புக்கு முடியாமல் போகாமல் இருந்து விடுவார். ஆயினும் குறையொன்றுமில்லை மனோபாவம்தான்.

திநகர் மகாலக்ஷ்மி வீதியில் இருந்த குருஜி ஸ்வாமிகள் இவரது அத்தை மகன். அவருடனான அறிமுகம் என் சகோதரியின் வாழ்க்கையில் ஒரு வரம் மாதிரி நிகழ்ந்த நிகழ்வு. பின்னாளில் அவர் நீலாங்கரை அருகில் ஆஸ்ரமம் அமைத்துக் கொள்ள ரிட்டையர் ஆனபின் இவரும் அங்கே வீடு பார்த்துக் கொண்டு போய்விட்டார். அவர் மறைவுக்குப் பிறகு அவர் சமாதி, மற்றும் ஆலயத்தை இவர் பார்த்துக் கொள்வதாகக் கேள்வி. 

பார்த்து சில வருடங்களானாலும், இன்றைக்கு ஏதோ எழுதும் அலுவலகக் குறிப்புக்கள் பாராட்டப்படும்போதும், நல்ல சங்கீதத்தை ரசிக்கும்போதும்,  படிக்க புத்தகங்களைத் எடுக்கும்போதும் நன்றியுடன் நினைக்கத் தவறியதேயில்லை. இது அவர் கொடுத்த பிச்சை. ஒரு வேளை தந்தையிருந்து சொல்லிக் கொடுத்திருந்தாலும் வராத ரசனை, நண்பனாய் இருந்து சொன்னதால் பச்சென்று பிடித்துக் கொண்டதோ என்னவோ.

அவர் மனைவி திருமதி காவேரிபாய் அவருக்கு கிடைத்த பொக்கிஷம். ஜோசியத்தில் அபார தேர்ச்சி. நன்றாகப் பாடுவார். எனக்குச் சாலப் பரிந்தூட்டிய தாய் அவர். அவர் கை ரசம் போல் இன்று வரை சாப்பிட்டதில்லை.

‘ராம்ஜி சார்! என் நன்றிகள்’

Tuesday, November 9, 2010

பயணம்..

திசையற்ற வெளியில் என் பயணம்
நானும் என் நிழலும் மட்டுமே
பகலின்றி இரவின்றி
பயணம் மட்டுமே..
திடீரெனத் தோன்றியதோர் பட்டாம்பூச்சி
இமை விசிறி என் முன் பறந்தது..
யார் நீ! என்றேன்
நான் நீ என்றது!
சொன்ன நொடியில் நான் அதுவென்றுணர்ந்தேன்
பாதை தோன்றியது! ஓரம் பசும் புற்களும்
பந்தலாய் மரங்களும் பறவை ஒலிகளும்
களைப்பு மறைந்து கனவாய்த் தோன்றுகிறது
இப்போது நானும் என் பட்டுப்பூச்சியும் மட்டுமே!
பகலின்றி இரவின்றி
பயணம் தொடர்கிறது இசையாய்...
~~~~~~~~~~~~~~~~~~~

Friday, November 5, 2010

தேவன் கோவில் மணியோசை..

இன்று தீபாவளி! நரகாசுரனை அழித்து மக்கள் வாழ்வில் நல்லொளி பரப்பிய நாள். அசுரன் அழிந்தானோ இல்லையோ நரகம் மட்டும் சிலருக்கு வாழ்க்கையாய் அமைந்துவிடுகிறது. எத்தனை விதமான நரகங்கள்? வேண்டாச் சிசுவாய், உழைக்க வழியின்றி ஊனமாய்,சுமையாய் முதியோர் இல்லத்திலென்று எத்தனை எத்தனை. இவர்களையெல்லாம் எதோ ஒரு விதத்தில் காப்பாற்றி வாழவைக்க மனிதர்களும் அமைப்புக்களும் இருக்கின்றன. வாழ்க்கைப் புயலில் எதிர்நீச்சலிட்டுக் களைத்து கை சோர்ந்து நினைவு தொலைத்த ஜீவன்கள் தெருவோரம் மயங்கியிருக்கிறார்களா, மரித்திருக்கிறார்களா என்றே தெரியாமல் ஈமூடி, நாய் குதறி, மேலாடையின்றி கிடக்க மூக்கைப் பொத்தியபடி நாம் கடந்து போன ஜீவன்கள் ஒன்றாவது இருக்கும் நம் வாழ்வில்.

நம்மில் அந்த நரகாசுரன் இல்லாமலா போய்விட்டான்? குப்பை அள்ள வரும் மாநகராட்சி, நகராட்சி ஊழியர்கள் கூட இது குறித்து ஏதேனும் செய்ய வழியிருக்கிறதா? அரசு ஆஸ்பத்திரிகளில் அவசர சிகிச்சைப் பிரிவிருக்கிறதே. இத்தகையோரைப் பற்றி தகவல் பெறவோ மீட்கவோ வழியிருக்கிறதா? இவர்களுக்குச் செய்யக்கூடியது பெரியதாக ஒன்றுமில்லை. அதிகபட்சம் போராடி ஒரு வாரமோ இருவாரமோ மனிதனாய் வாழ்ந்து, மனிதனாய் மரித்து, மனிதனாய் அடக்கம் பெற ஒரு வாய்ப்பு.

அழுக்கும் கழிவும் பூசி, அருகில் செல்லவே முடியாத நிலையில் இருக்கும் இவர்களை மருத்துவமனையில் அல்ல எந்த இல்லத்தில் சேர்த்துக் கொள்வார்கள். இத்தகையோரைத் தேடித் தேடி அலைந்து, தெருவோரம் சுத்தம் செய்து, ஆடையுடுத்தி, ஆதரவான இல்லங்களில் சேர்த்தோ, மருத்துவ உதவியோ செய்ய எத்தனை தெரசாக்கள் வேண்டும்.? ஒரு அமைப்பால் கூட இதைச் செய்வது எத்தனை பெரிய காரியம்.

தீபாவளிதான். கொண்டாட்டம்தான். இனிப்பும், பட்டாசும், ஒளியும், சத்தமும் என்று மகிழ்ச்சிதான். ஆனாலும் தீபாவளியின் முக்கியமான அம்சம் இதெல்லாம் செரிக்க காரமாய், கசப்பாய் சற்றே இனிக்கவும் செய்யும் தீபாவளி மருந்து. இந்த இடுகையும் அத்தகையதே.

இதோ முதல் படத்தில் இருக்கிறாரே சுப்பிரமணி. ஒரு குப்பைத்தொட்டியோரம் கண்டுபிடிக்கப்பட்டவர். டிமெண்ஷியாவில் துன்புற்றவர். இடுப்பில் துணியில்லை என்ற நினைப்புக் கூட இல்லை. எந்த உணர்வு மறந்தாலும் அன்னை இட்ட தீ பசி இருக்கிறதே. அது மட்டுமே அறிந்தவர். அந்தக் குப்பை தொட்டி அருகே மரித்துப் போயிருக்கக் கூடும். குப்பையையாவது அள்ளி அதற்குரிய இடத்தில் சேர்க்க இருக்கும் அமைப்பு கூட இவரைத் தொடுமா?


வாழ்நாள் முழுதும் நோயுற்றவருக்கு தாதியாய் நோய் குறைக்கும் பணி நர்ஸ் அல்லவா. நம் உலகின் தேவதைகள் அல்லவா? அவர்களுக்குமா சாபம் இருக்கும். உழைக்கும் காலம் முழுதும் தாதியாய் பணிசெய்த ஒருத்தி, பணி மூப்பு பெற்று பென்ஷன் கூட பெறும் நிலையில் உள்ள ஒருத்தி, கருப்பை சரிந்து காளான் பூத்து தன் நினைவின்றிக் கிடக்கும் சாபம் கொடுத்த தெய்வமோ இயற்கையோ நிந்திக்கத் தோன்றுகிறதா? இருங்கள் இருங்கள். இந்த லீலாவதியை மாதந்தோறும் ஆட்டோவில் ஏற்றி பென்ஷன் வாங்க வைத்து பிடுங்கிக் கொண்டு திரும்ப சைதாப்பேட்டை சுரங்கப் பாதையருகே போட்டுப் போகும் ஐந்து நல்லாத்மாக்களும் நம்மிடையே இருக்கிறார்கள். 

இதோ முனியம்மா. அந்தக் கண்ணை ஒரு நிமிடம் பார்க்க முடியுமா நம்மால். எத்தனை அவலம். எத்தனை வலி. பிரிந்த கைகளில் எத்தனை இயலாமை. வயது எழுபது. ஆனாலும் பெண். இந்த வயதிலும் பாலியல் வன்முறைக்கு ஆளாகும் நரகம் தருகிறது நாம் தொண்டை கிழியப் பேசும் சமூகமும் கலாச்சாரமும்.


கடைசியாக தனம். எறியும் உணவில் எங்களுடன் உனக்கென்ன போட்டியென நாய்கள் போட்ட சண்டையில் தோற்று தன் சதையை உணவாக்கியவள். உடலில் மட்டுமே ஆடையில்லை. உடலில் மட்டுமே அழுக்கு. மனம் பளிங்கு போன்றது. இல்லையேல் தன்னையும் கரைசேர்க்க வந்த ஜீவனிடம் நான் பிழைக்கமாட்டேன் தம்பி. நீ வாழ வேண்டியவன். என்னைத் தொடாதே என்று சொல்லும் மனம் எப்படி வாய்க்கும்?

படிக்கவே அயற்சி தருகிறதே. ஒரு குற்ற உணர்ச்சிகூட வரலாம். கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக் கொள்ளலாம். நம்மிலும் ஒரு தேவன் மனிதனாகப் பிறந்திருக்கிறான். தனி மனிதனாக இத்தகையோரை மனிதராய்ப் பார்த்து, மனிதனாய் உதவி, மனிதம் காக்கும் இல்லங்களில் சேர்த்து, மனிதனாய் மரித்தோருக்குக்கான மரியாதை செய்யும் இவரை அடையாளம் காட்ட எனக்கு வாய்த்ததே என் வரம். ஓரிருவரை இப்படிக் கரை சேர்த்தாலே பெரிய விஷயம். ஒற்றை மனிதனாய் ஒன்றிரண்டல்ல ஐந்நூறுக்கும் மேற்பட்டவர்களை தேடித் தேடி காப்பாற்றிய இவர் பெயர் வெங்கடேஷ்.

ஏழ்மையான குடும்பம் எத்தனை எதிர்ப்பார்ப்பு வைத்திருக்கும் மகன்மேல்? சிறுவயது முதலே சேவை செய்யவே நான் பிறந்தேன் என அலையும் மகனை ஊக்குவிக்கும் நிலையிலா இருக்கும்? படித்தது பத்தாவது. அந்த வயது இளைஞனுக்கு சமுதாயத்தில் பிழைக்கவோ பொறுக்கவோ எத்தனை வழிகள்? தன் பாதை இதுவென்று தீர்மானிக்கும் வயதா அது? கட்டிட வேலை, கம்பவுண்டர் வேலை, கூரியர் டெலிவரி, சமூகச் சேவை அமைப்புகளிலே கூட சம்பளத்துக்காக வேலை என்று அத்தனையும் பார்த்து பின்பு உதறி உதவ மட்டுமே பிறந்தவன் நான் என்ற நோக்கோடு வாழும் இவர் இருப்பது திருவான்மியூர்.

தப்பித் தவறி நம்மில் இருக்கும் மனிதம் விழித்து இத்தகையோரைக் காக்க இருக்கும் அவசர உதவிக்கு அழைத்தாலுமே கூட வெங்கடேஷின் கைபேசி எண் கொடுத்து தொடர்பு கொள்ளச் சொல்லும் அளவு திறமையாகச் செயல்படுபவர். ஆதரவற்ற குழந்தைகள், முதியோர், நினைவிழந்தவர்களை அங்கேயே சுத்தம் செய்து அவரவர்களுக்கான இடம் தேடிச் சேர்ப்பதே வாழ்க்கை எனச் சலிப்பில்லாமல் வாழ்வதே பெரிய விஷயம்.  ‘அதை அனுபவம் என்று கூட சொல்லமாட்டேன், அந்த ‘ருசி’ எனக்கு ரொம்ப பிடிக்கும் சார்’  என வெள்ளந்தியாய்ச் சிரிக்கிறார்.

‘அநாதைன்னு யாருமே இல்லைங்க! ஆதரவில்லாதவங்கன்னு சொல்லுங்க’ என்று சிரித்தபடி கடிந்து கொள்ளும் இவர் செய்யாத சமூக சேவையென்று ஒன்று இருக்கிறதா தெரியவில்லை. பாலியல் தொழிலாளரிடையே விழிப்புணர்வு, தற்காப்பு முறை விளக்கம், எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு, ஆதரவற்ற இல்லங்களுக்கு உதவ விரும்புபவர்களுக்கு வழிகாட்டி என சதாவதாரம் எடுக்கிறார்.

காவல்துறை, சமூக ஆர்வலர்களிடையே இவருக்கான பெருமதிப்பும் அங்கீகாரமும் போதுமா? ‘அகல்’ என்ற ஒரு அமைப்பைத் தொடங்கி தானே இவர்களுக்கான இல்லத்தை நடத்தவேண்டும் என்ற கனவு சுமந்த தேவன் இவன்.  ‘அது தானே நடக்கும் சார்’ என்ற நம்பிக்கையும் இருக்கிறது. ‘செத்தப்புறமும் கூட நம்மால மனுசனுக்கு எதுனாச்சும் உபயோகம் இருக்கணும் சார். எங்கயாவது ஒரு ஆஸ்பத்திரியில் மனித எலும்புக்கூடாகவாவது மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு உதவுவேன்’ என்று சிரிக்கும் இவர் தன் கண்ணையும் உடலையும் தானம் கொடுத்திருக்கிறார். முடிந்த போதெல்லாம் ரத்ததானமும். 

தன் பையில் சட்டநிமித்தம் சுமக்கும் ஆவணங்களின் சோகம் தாங்கவொண்ணாதது. சமீபத்தில் மன நிலை குன்றியவர் போல் காணப்பட்ட ஒரு இளைஞன் என்னுடன் பணிபுரியும் நண்பர் தினமும் அளிக்கும் உணவை மட்டும் உண்டு வந்த ஒருவன், ஒரு நாள் அழுக்கடைந்த கையுடன் சாப்பிடுவதைப் பொறுக்காமல் கையாவது கழுவி விடுவோம் என்று இவருடன் முயன்றபோது வாய் திறந்து பேசினான். ரயில்வேயில் வேலைக்குப் பரிட்சை எழுத வந்த கல்கத்தா வாலிபன். நண்பர்கள் எல்லாம் விட்டுச் சென்றுவிட கலங்கிப் போய் இருந்திருக்கிறான் பிரமை பிடித்தாற்போல். ‘குளிக்கவேண்டும்’ என்ற அவன் பேச்சு அவனுக்கு வாழ்க்கை தந்தது.

வால்டாக்ஸ் ரோடிலிருக்கும் மாநகராட்சி குளியலறையில் குளிக்க வைத்து, அலுவலகத்தில் இதற்காகவே சேகரித்து வைத்திருக்கும் பழைய பேண்ட் சட்டைகளை அணியச் செய்து, உணவளித்து, வீட்டிலிருந்து சப்பாத்தியும், ட்ரெயின் டிக்கட்டும், வழிச் செலவுக்குக் காசும் கொடுத்து அவன் குடும்பத்தோடு சேர வழி செய்ய முடிந்தது நண்பர் சுரேந்திரனால். அதற்குப் பெரிதும் உதவியவர் வெங்கடேஷ். இல்லையெனில் என்றோ ஒரு நாள் ஏதோ ஒரு குப்பைத் தொட்டி அருகில் ஆதரவின்றி காப்பாற்றப் பட்டிருக்கக் கூடுமோ?

நண்பர் வெங்கடேஷ் குறித்த மேலதிக தகவலுக்கு அவரின் முகவரியும் தொடர்பு எண்ணும் கீழே:

S.M.Venkatesh
No 74/55 South Mada Street, 
Thiruvanmiyur, Chennai 600 041.
email: agalvenkat@yahoo.co.in
Mobile 93801 85561
__/\__

Thursday, November 4, 2010

ஆங்கில மோகமும் அரசு ஊழியனும்...

சென்றமாதம் பதிவர் கே.ஆர்.பி.செந்தில் ஆங்கில மோகம் குறித்து ஒரு அருமையான பதிவு எழுதியிருந்தார். சீனாக்காரன் ஆங்கிலத்திலா படிக்கிறான்? என்னல்லாம் கண்டுபிடிக்கிறான் என்ற சிலாகிப்புக்கு இனி வழியில்லை. கண்டிப்பாக பார்க்கவேண்டிய காணொளியைத் தந்திருக்கிறார் திரு செந்தில்.


அதற்குப் பின்னூட்டமிட்ட நண்பர் ராஜ நடராஜன் இவ்வாறு கூறியிருந்தார்.:
//இப்போதைய காலகட்டத்தில் ஆங்கிலம் நமக்கு அவசியம் தேவை.


இந்தியாவில் தமிழனை விட மொழியை நேசிக்கும் இன்னொரு மாநிலக்காரன் இல்லை என்பேன்.


தமிழை தமிழாகவும்,ஆங்கிலத்தை ஆங்கிலமாகவும் பேசுவோம்.


ஆனால் நாம் எங்கே கோட்டை விட்டு விடுகிறோமென்றால் தமிழுடன் ஆங்கிலம் கலந்து பேசுவதில்.சன்,கலைஞர் தொல்லைக்காட்சிகளனைத்தும் சமீபத்து மொழி வில்லன்கள் மட்டுமே.உண்மையான மொழி வில்லன்கள் அரசாங்க அலுவலகம் முழுதும் ஒளிந்து கொண்டிருக்க்றார்கள்.இவர்களிடமிருந்தே இந்த நோய் மொத்த சமூகத்திற்கும் பரவியுள்ளது என்பது எனது கணிப்பு.


மாற்றுக்கருத்தாளர்கள் தங்கள் எண்ணங்களை பின்னூட்ட வேண்டுகிறேன். //


செந்தில் அனுமதித்தால் தனியே இடுகை போடுகிறேன் என்று சொல்லியிருந்தேன். செந்தில் பெருந்தன்மையாக இதற்கு அனுமதி எதற்கு என்று பின்னூட்டி இருந்ததைத் தாமதமாகத்தான் பார்த்தேன். இதற்கு பதிலளிக்க எனக்கிருக்கும் ஒரே தகுதி அரசாங்க ஊழியன் என்ற ஒரே தகுதி. மற்றபடி மொழி குறித்த சிறப்புத் தகுதி எதுவுமெனக்கில்லை என்பதை உணர்ந்தே இதை எழுதத் துணிகிறேன்.


அட சை! இந்த எளக்கியத் தமிழெல்லாம் நமக்கு சரிப்படாது. நம்ம வழியிலையே போவம். அண்ணோவ்! புடிங்க பாயிண்டு.


இந்தியாவில் தமிழனை விட மொழியை நேசிக்கும் இன்னொரு மாநிலக்காரன் இல்லை என்பேன்.


தப்புண்ணா! இந்த பெங்காலி பெங்காலின்னு இருக்காவளே. அவனுவளவிடவா. பரோடா ரயில்வே காலேஜில் தெரியாம ஹிந்தி தெரியாதுன்னு சொல்லி மாட்டிக்கிட்டேன். கூட ஒரு பெங்காலியும். சிக்கினாண்டா சின்ராசுன்னு ஸ்பெஷல் க்ளாஸ்னுட்டானுவ. நான் தொண்டை கட்டினா மாதிரி க 4, ச 4னு சாவறப்ப, பெங்காலி டவுட் கேக்கறேன்னு அந்தாளுக்கு பெங்காலி சொல்லிக் குடுத்துட்டிருக்கான்.


தமிழை தமிழாகவும்,ஆங்கிலத்தை ஆங்கிலமாகவும் பேசுவோம்.


முதல்ல தமிழை எடுத்துக்குவோம். எந்தத் தமிழைப் பேசறது. சென்னை, மதுரை, கொங்கு, தஞ்சைன்னு விதவிதமால்ல இருக்கு. அந்தந்த ஊர்த் தமிழையே சுத்தமா பேசினா அந்தூர்க்காரங்களுக்கே புரியுமான்னு இல்லை சந்தேகம். மதுரைக்காரர் ‘வாரேன்’னா சென்னைக்காரன் என்னத்தை ‘வாரச்சொல்றான்’னு இல்ல நிப்பாரு. ஒரு லிஸ்டே இருக்கே! ஜன்னல்ல இருந்து எதெல்லாம் வேற்று மொழியில இருந்து வந்ததுன்னு. ஜன்னலை ஏத்துக்க முடியுதுன்னா டிக்கட் ஏன் உறுத்தணும்?


ஆங்கிலம் பாடு இன்னும் அதோகதி. ஆந்திரக்காரனுக்கு  ‘அயரன்’, கேரளாக்காரனுக்கு  ‘செண்டிமெண்ட்’,வடக்கூரானுக்கு ‘புய்புல்’, பெங்காலிக்கு ‘பொவர்’, தமிழனுக்கு ‘றுப்பீஸ்’ இப்படி அடிபட்டு மிதிபட்டு குத்துயிரால்ல இருக்கு. ஆக தமிழன்னே இல்லை. இந்திய மொழி எல்லாமும், இந்தியன் எல்லாருட்டயும் ஆங்கிலமும் இப்படி கலந்தாங்கட்டியா அடி வாங்கிட்டுதான் இருக்கு. இந்தச் சுட்டியைப் பாருங்க. எல்லாரும் உலக அளவில் பிரபலமானவங்கதான். இந்த ஆங்கிலத்தில் எத்தனை பேப்பர் விவாதித்திருப்பார்கள்? ஆங்கிலம் பாருங்க எப்படி இருக்குன்னு. ஹி ஹி. நம்ம ப்ரணாப்ஜி அவரோட ஆங்கிலத்தை வச்சிக்கிட்டு வெளியுறவுத்துறை அமைச்சரா வேற இருந்தாரே.


இப்ப வருவோம் அரசு ஊழியர் கதைக்கு
அது முக்கியமா மத்திய அரசு ஊழியர்களைக் குறிக்கிறதுன்னு வைத்துக் கொள்ளலாம். மாநில அரசில் தமிழ் பயன்பாடு அதிகம். மக்களுடனான தொடர்பிலும் தமிழ்தான் ப்ரதானம். இது இன்றைய நிலமைன்னு சொல்லிட முடியாது.75 வருடத்துக்கு முன்னாடி எடுத்துண்டாலும், பத்திரத்தில் எழுதின ‘தாவர ஜங்கம சொத்துதான்’ அர்த்தமே புரியாமல் இன்றும் தொடர்கிறது.


மத்திய அரசு ஊழியர்கள் பெரும்பாலும் ஆங்கிலம் கலந்து பேச வேண்டியிருக்கும் அலுவலகத்தில். காரணம் இடமாற்றல் ஷரத்துக் காரணமாக பெரும்பாலான மத்திய அரசு அலுவலகங்களில் மற்ற மாநிலத்தவருடன் பகிர வேண்டியிருப்பது. மத்திய அரசு அலுவலகத்தில் போலீஸ் ஸ்டேஷன் மாதிரியே ரைட்டர் என்று ஒருத்தர் எல்லா செக்‌ஷனிலும் இருந்திருக்கிறார். இன்னமும் சில அலுவலகங்களில் இருக்கிறார். அவருக்குத்தான் ஆங்கிலத்தில் ஓரளவு சரளமாக எழுத வரும். இதில மத்தவங்கள எங்க போய் கெடுக்கறது?


நம்ம ஊர்ல ’பட்லர் இங்கிலீஷ்’னே சொல்லுவாங்களே. இப்ப சாதாரணமா எல்லாரும் பேசுறதே அப்படி இருக்கிறதால இதை அதிகம் கேக்க முடியறதில்லை. அப்படி வெகுஜனங்களிடையே பரவியிருக்கலாம். பத்திரிகைகளிலும் ஆங்கில வார்த்தைகள், வடமொழி எழுத்துகள் அப்படியேதான் எழுதப்பட்டதில்லையா.


முக்கியமாக இன்னமும் ஆங்கிலோ இந்தியர்கள் நம்மிடையே பரவலாக இருக்கிறார்களே. அவர்களும் ஒரு காரணியாக இருக்கலாம் அல்லவா? ஒரு ஆச்சரியமான விஷயம் இவர்கள் அதிகம் வாழும்/வாழ்ந்த புரசைவாக்கம், பெரம்பூர் பகுதிகளில் இந்தத் தலைமுறை ரிக்‌ஷாக்காரர்கள் கூட 'Doveton','Five' எல்லாம் ‘ட்வ்ஃப்டன்’,  ‘ஃபைவ்ஃப்’ என்று அழகாக உச்சரிப்பதைக் காணலாம்.


ரஜனிமாதிரி ‘ஐ கேன் டாக் இங்க்லீஷ், வாக் இங்க்லீஷ், ஸ்லீப் இங்க்லீஷா’ இருந்தாலுமே கூட இந்தியனின் ஆங்கிலம் வேறு வேறு ரூபத்தில்தான் இருக்கும் இல்லையா? நம்மாளுக்கு ஆங்கிலத்தில் எழுதுறது ரொம்ப சுலபம். ஆங்கிலத்தில் நினைச்சு ஆங்கிலத்தில் எழுதிடுவான். பேசுறப்பதான் மென்னிய பிடிக்கும். காரணம் தமிழில் நினைத்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து  அப்புறம் பேசுவது. எங்கே சொன்னது சரியாகப் புரியாமல் போயிருக்குமோ என்று தமிழிலும் சொல்லுவதும் ஒரு மனப்பாங்கு. 

அதையும் விட ‘டமிலனுக்கு’மட்ட்ட்ட்டும் கொஞ்சம் கேப் விட்டுப் பேசறது பெரிய வெட்கப்படக்கூடிய விஷயம். வெள்ளைக்காரனே கொஞ்சம் 'well'..er...i... i..i mean' இப்படியெல்லாம் ஃபில்லர் போட்டு சரளமா பேசினாலும் நம்மாளுவ இப்படி பேச மாட்டாங்க.


முக்கியமான இன்னொரு விஷயம் ஊடகங்கள் வாயிலாக மேநாட்டு கலாச்சார அறிமுகமும், ஆங்கில வழிக் கல்வி வாயிலாக அதன் பயன்பாட்டின் சுலபமும் கூட ஒரு காரணி என நினைக்கிறேன். உதாரணமாக 'I love my brother' இதைத் தமிழில் சொன்னால் கொஞ்சம் செயற்கையாகத் தோன்றும். தமிழில் இந்த உணர்வு இல்லாமலா இருந்தது. அதன் வெளிப்பாடு இல்லை. ‘என் அண்ணன்னா எனக்கு உசிரு’ என்பது இந்த நெருக்கம் தருமா? கோபத்தில் உதிர்க்கும் ‘WTF', 'Shit' போன்ற வார்த்தைகளை தமிழில் சொன்னால் ஏற்றுக் கொள்ளும் மனோபாவம் இருக்கிறதா? அடிதடியில் அல்லவா முடிகிறது. ஆங்கிலத்தில் கெட்டவார்த்தையாக, வசவாகத் தோன்றாத ஒன்று தமிழில் அப்படி மாறிவிடுவது ஏன்?


இது இப்படியே அறைகுறையாத்தான் இருக்குமான்னா அப்படித்தான் தோன்றுகிறது. காரணம், நாற்பது வருஷத்துக்கு முன்னயும் சரி, இப்பவும் சரி தமிழோ, ஆங்கிலமோ, மற்ற மொழியோ பள்ளியில் துணைப்பாடம்தான். ஹிந்திப் ப்ரசார் சபாவில் தனியா ஹிந்தி படிக்கப் போனாமட்டும் அழகா இலக்கணத்துல ஆரம்பிச்சி சொல்லித்தராங்க. 'Wren and Martin' க்ராம்மருக்கு கீ போடுவாங்க இந்தியர்கள்னு தெரிஞ்சிருந்தா வெள்ளைக்காரன் தூக்கில் இல்லையா போட்டிருப்பான். ஒரிஜினலை விட இந்த கீ இல்லையா அதிகம் விற்றது?


இன்றைக்கு வெகு சரளமாக ஓரளவு ஆங்கிலத்தை ஆங்கிலமாக பேசுபவர் என்று கருதப்படுபவரில் எத்தனை பேருக்கு ‘Sesame and Lillies' புரியும்? புரியுறது அப்புறம் இருக்கட்டும். அந்த அழகு கெடாமல் வாசிக்க முடியும்? எனக்கு இதைப் படிக்கச் சொன்னவர் அந்தக் காலத்தில் சிக்ஸ்த் ஃபார்ம் ட்ராப் அவுட். அலுவலகப் பரிட்சையில் ஜெனரல் இங்கிலீஷ் என்ற ஒரு பேப்பர் உண்டு. அதிலும் ‘Precis Writing' 30 மார்க். 1960லிருந்து அந்தப் பரிட்சையில் ஃபெயிலாகி 1980ல் என்னோடு பாஸ் செய்தார் ஒருவர். ஹி ஹி. அவர் எழுதின லட்சணம் அப்படின்னு இல்லை. திருத்துற ஸ்டேண்டர்ட் குறைஞ்சிட்டுது.


இப்பொழுதெல்லாம் ஸ்டெனோக்ராஃபர்ஸ் ரொம்ப நக்கலா சொல்லிடுறாங்க. நீங்க சொல்லுங்க சார். இங்கையே டைப் பண்ணிடுறேன்னு. ரெண்டு வரி சொல்லிட்டு, எங்க படின்னு கேட்டு, இல்லை வேணாம், அடிச்சிட்டு இது எழுதிக்கோன்னு சொல்ற லட்சணத்துக்கு ஷார்ட் ஹேண்ட் வேற எதுக்கு?


ஆக, நல்ல தமிழோ நல்ல ஆங்கிலமோ (ஓரளவுக்கு) பேச, எழுத கல்வி முறை மாறவேண்டும். தாய் மொழியில் அடிப்படை இலக்கணமே தெரியாத பொழுது ஆங்கில இலக்கணம் எங்கிருந்து படிக்க? வீட்டில் வந்தால் எத்தனைப் பேருக்கு சொல்லித்தரும் அளவுக்கு தெரியும். அல்லது நேரமோ பொறுமையோ இருக்கிறது? பயிற்சி நிலையம், ட்யூஷனென்று போனாலும் தரம் இதேதான் என்னும் போது மாற்றம் சாத்தியமேயில்லை.


Sesame and lillies தரவிறக்க சுட்டி

(அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துகள் !!!)